நாட்டில் சமீபகாலமாக மனிதத்தன்மையற்ற சம்பவங்கள் பல அரங்கேறி வருகிறது. பெண்களை நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்துவது, பாலியல் வன்கொடுமைகள், பழங்குடியின மற்றும் பட்டியலின மக்கள் மீது சிறுநீர் கழிப்பது என்று பல விரும்பத்தக்காத சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த வரிசையில் தற்போது உத்தரபிரதேசத்தில் மற்றொரு மனிதத்தன்மையற்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.
அடி, உதை:
உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ளது கஸ்கஞ்ச் மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ளது இமாம்பக்ஷ் பகுதி. இந்த பகுதியில் வசித்து வருபவர் வாதி ரஃபிகுல். இவர் ஒரு சமையற்கலைஞர். மேலும் இவர் வீடுகளுக்கு சென்று பூஜை செய்யும் வேலையும் மேற்கொண்டு வந்துள்ளார். இதன்மூலம் இவருக்கு ஓரளவு வருமானம் வந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை மாலை இவர் தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, 3 திருநங்கைகள் மற்றும் 2 ஆண்கள் என 5 பேர் ரஃபிகுல்லை சுற்றி வளைத்தனர், அவர்கள் ரஃபிகுல் அங்கிருந்த செங்கல் சூளை அருகே இழுத்துச் சென்றனர். அங்கு வைத்து ரஃபிகுல்லை அந்த திருநங்கைகளும், ஆண்களும் சரமாரியாக அடித்துள்ளனர்.
வாயில் சிறுநீர், மொட்டை:
அவரை அடித்தது மட்டுமின்றி அவரிடம் இருந்த பணத்தையும் பறித்துக் கொண்டுள்ளனர், அவர்கள் சரமாரியாக அடித்ததால் அவர்களிடம் தன்னை விட்டுவிடுமாறு ரஃபிகுல் கெஞ்சியுள்ளார். ஆனாலும், கொஞ்சமும் மனம் இறங்காத அவர்கள் அவரை தாக்கியதுடன், அவர் அழுது கொண்டிருக்கும்போதே அவர் வாயில் சிறுநீர் கழித்துள்ளனர்.
பின்னர், மூன்று திருநங்கைகளும் சேர்ந்து கொண்டு அவருக்கு மொட்டை அடித்தனர். இதை அங்கே இருந்த மற்றவர்கள் வீடியோவாக எடுத்தார். ரஃபிகுல் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சிய அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டனர்.
தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து பாதிக்கப்பட்ட சஹாவர் காவல் நிலையத்தில் ரஃபிகுல் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் லாலி, ரிச்சா, கரீனா, மோகத் ஆசின் மற்றும் பவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே இருந்த முன்பகை காரணமாக இந்த சம்பவம் தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரஃபிகுல்லை அவர்கள் தாக்கிய கொடூர வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாட்டில் தொடர்ந்து மனிதத்தன்மையற்ற, விரும்பத்தக்காத மற்றும் அருவருக்கத்தக்க சம்பவங்கள் அரங்கேறி வருவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.