Crime: நாட்டில் சமீபகாலமாக குடும்ப வன்முறைகள் அதிகரித்து கொடூர கொலையாக மாறி வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 


மனைவியை கொன்ற கணவன்:


உத்தர பிரதேச மாநிலம் ஃபதேபூர் கோட்வாலி பகுதியைச் சேர்ந்தவர் அனில் கனௌஜியா ராஜ்கீர். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கனௌஜியா (27). இந்த தம்பதிக்கு கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 


இந்த நிலையில், இன்று காலை 8 மணியளவில் கணவர் அனில் வேலைக்கு சென்றுள்ளார்.  வேலைக்கு சென்ற இவர், காலை 9.30 மணிக்கே வீட்டிற்கு ஆயுதங்களுடன் வந்திருக்கிறார். அப்போது, மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் நீடித்த நிலையில், கையில் வைத்திருந்த அரிவாளால் மனைவியின்  கழுத்தை சரிமாரியாக வெட்டியுள்ளார். 


பின்னர், துண்டிக்கப்பட்ட மனைவியின்  தலையுடன் வீட்டிற்கு வெளியே வந்திருக்கிறார். பின்னர், அங்கிருந்த  பேருந்து நிலையம் நோக்கி துண்டிக்கப்பட்ட தலையுடன் சென்றிருக்கிறார். இதனால், அங்கிருந்த மக்கள் அச்சத்துடன் பயந்து ஓடியுள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியானது. 


தலையுடன் சாலையில் சுற்றித்திரிந்த கொடூரம்


அதில், தனது மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் சாலையில் நடந்து செல்வதைக் காட்டுகிறது.  அதே சமயம் சுற்றியிருப்பவர்கள் கொடூர சம்பவத்தை கண்டு அச்சம் அடைந்து இருக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குற்றம்சாட்டப்பட்ட அனில் என்பவர்  மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கைதான அனில் என்பவரிடம் விசாரித்ததில், மனைவி  மீது சந்தேகம் எழுந்ததால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்திருக்கிறார். 


மற்றொரு சம்பவம்:


இதேபோல, மற்றொரு சம்பவம் மேற்கு வங்கத்தில் நடந்துள்ளது. அதாவது, மேற்கு வங்க மாநிலம் கிழக்கு மிட்னாபூர் பகுதியைச் சேர்ந்தவர் கௌதம் குச்சாய்த். இவரது மனைவி  பூல்ராணி. இந்த தம்பதிக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார். கணவர் கௌதம் குச்சாய் ஒரு சிறிய கடையை நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம், தனது மனைவி பூல்ராணியை  துண்டு துண்டாக வெட்டிவிட்டு தலையுடன் சாலையில் சுற்றித் திரிந்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


வீட்டிற்குள் மனைவி பூல்ராணியை வெட்டிவிட்டு வெளியே ஆயுதங்களுடன் வெளியே வந்திருக்கிறார். பின்னர், இவரது வீட்டிற்கு அருகில் இருக்கு டீக்கடைக்கு துண்டிக்கப்பட்ட தலையுடன்  சென்றதாக கூறுகின்றனர். ஒரு பக்கம் கையில் துண்டிக்கப்பட்ட தலையையும், மற்றொரு பக்கம் ஆயுதத்தை வைத்திருந்ததாக அக்கம் பக்கத்தினர் கூறுகின்றனர். 


இதனை அடுத்து, அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கௌதம் குச்சாய்த்தை கைது செய்து, அவர் வைத்திருந்த ஆயுதத்தை பறிமுதல் செய்தனர்.