உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூரில் மனைவி தற்கொலை செய்து கொள்வதை கணவர் வீடியோவாக எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எடுத்தது மட்டும் அல்லாமல் மனைவி இறந்த பிறகு, அந்த வீடியோவை மனைவியின் குடும்பத்தினருக்கு அவர் காட்டியுள்ளார்.
திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆன ஷோபிதா குப்தா செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டார். அவர் தனது கணவருடன் சண்டையிட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். சஞ்சய் குப்தாவால் மொபைல் ஃபோனில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், ஷோபிதா, தன்னுடைய கழுத்தை நெரித்து கொள்கிறார்.
படுக்கைக்கு மேல் உள்ள மின்விசிறியில் தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கிறார். ஷோபிதா, மரணத்தின் விளம்பில் இருந்தபோதிலும், சஞ்சய் குப்தா அவரைத் தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. "அருமை. இது உன் மனநிலை. உனக்கு மிகவும் மோசமான மனநிலை உள்ளது" என சஞ்சய் குப்தா கூறுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.
அப்போது, படுக்கையின் மேலே தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கும் அவர் தன்னுடைய கழுத்தில் நெரிக்க வைத்திருந்த கயிறை அகற்றி, தனது கணவரை முறைக்கிறார். அதோடு, வீடியோ முடிவடைகிறது. இதற்கு பிறகு என்ன நடந்தது என்பது தெரியவில்லை.
இதுகுறித்து ஷோபிதாவின் தந்தை ராஜ் கிஷோர் குப்தா கூறுகையில், "செவ்வாய்கிழமை மதியம் என் மகள் தற்கொலை செய்து கொண்டதாக மருமகனிடம் இருந்து அழைப்பு வந்தது. படுக்கையில் இருந்த அவரது உடலைப் பார்க்க அவரது குடும்பத்தினர் அவரது வீட்டிற்கு விரைந்தனர். அப்போது, சஞ்சய் குப்தா என்னுடைய மகளுக்கு சிபிஆர் சிகிச்சை அளித்து கொண்டிருந்தார்.
தற்கொலை செய்து கொள்ள மேற்கொண்ட முதல் முயற்சியிலேயே அவரைக் காப்பாற்றியதாகக் கூறி, தான் எடுத்த வீடியோவை மனைவியின் குடும்பத்தாரிடம் சஞ்சய் குப்தா காட்டினார். அவரது நடத்தை மிகவும் சந்தேகத்திற்குரியதாக இருந்தது.
அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக அவள் மார்பை அவர் பம்ப் செய்வதைப் பார்த்தோம். முன்பே என்னுடைய மகள் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறும் வீடியோவை எங்களிடம் காட்டினார். அவர் அவரைத் தடுக்கவில்லை. ஆனால், வீடியோ எடுத்து கொண்டிருந்தார். மதியம் 12.30 மணியளவில் இது நடந்தது. சிறிது நேரத்திலேயே அவர் இறந்தது சந்தேகத்திற்குரியது" என்றார்.
ஷோபிதாவின் குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். பின்னர் போலீசுக்கு சென்றனர். அவரை காப்பாற்றியிருக்கலாம். ஆனால் யாரும் தடுக்கவில்லை என்பதை ஜீரணிக்க முடியாமல் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
இதுகுறித்து மனைவியின் உறவினர் ஒருவர் கூறுகையில், "எங்களுக்கு நீதி வேண்டும். அவரை தடுக்காமல் வீடியோ எடுத்து நிதானமாக பேசிக்கொண்டே இருந்தார்" என்றார். மனைவி மரணத்தில் சஞ்சயின் தொடர்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். "நாங்கள் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளோம்," என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.