வட இந்தியாவில் திருமண நிகழ்ச்சிகளின்போது பல வித்தியாசமான சடங்குகள் கடைபிடிப்பது வழக்கம். வட இந்தியாவில் கிராமங்களில்கூட துப்பாக்கிகள் பயன்பாடு அதிகளவில் காணப்படுகிறது. உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ளது சோன்பத்ரா. இங்குள்ள ராபர்ட்ஸ்கஞ்ச் மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் மணீஷ் மாதேஷியா என்பவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மணமகன் மணீஷ் மாதேஷியா திருமணத்திற்காக நேற்று முன்தினம் இரவு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். இந்த திருமணத்தில் மணமகனின் நெருங்கிய நண்பரான ராணுவ வீரரான ஹவில்தார் பாபுலால் என்பவரும் பங்கேற்றார். இவர் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். சமீபகாலமாக வட இந்தியாவில் நடக்கும் பல்வேறு திருமணங்களில் மணமகன் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுவதை பழக்கமாக வைத்துள்ளனர்.
இதனால், மணமகன் மணீஷ் மாதேஷியா வானத்தை நோக்கி சுடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்காக அவரது நண்பரான ராணுவ வீரர் பாபுலால் தனது துப்பாக்கியை கொடுத்துள்ளார். பாபுலாலிடம் இருந்து துப்பாக்கியை பெற்ற மணீஷ் மாதேஷியா திருமண நிகழ்ச்சிக்காக ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அப்போது, மணமகன் மணீஷ் மாதேஷியா தனது கையில் இருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
ஆனால், அந்த துப்பாக்கி சுடவில்லை. அப்போது, துப்பாக்கியை சரிபார்ப்பதற்காக கீழே இறக்கியபோது தவறுதலாக துப்பாக்கி சுட்டது. அப்போது, துப்பாக்கியில் இருந்து பாய்ந்த தோட்டா மணமகனின் நெருங்கிய நண்பரான ராணுவ வீரர் பாபுலால் மீதே பாய்ந்தது. இதில், படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றுள்ளனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்ததாக கூறியுள்ளனர்.
இதையடுத்து, போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்ததுடன் மணமகனை கைது செய்துள்ளனர். மேலும், அவரது நண்பர்கள் சிலரை பிடித்தும் விசாரித்து வருகின்றனர். திருமண ஊர்வலத்தில் ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்