Crime: உத்தர பிரதேசத்தில் பட்டியலினப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டியலினப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்:
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்முறை குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனையும் விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கூட, ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக வடமாநிலங்களில் நடக்கும் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கி வருகிறது. இந்நிலையில், தற்போது உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் சுக்லா. இவர் ஒரு மாவு ஆலை நடத்தி வருகிறார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பட்டியலின பரிவைச் சேர்ந்த 40 வயது பெண் ராஜ்குமார் சுக்லா வீட்டை சுத்தம் செய்ய சென்றுள்ளார். வீட்டை சுத்தம் செய்யப்போன பெண் நீண்ட நேரம் ஆகியும் தனது வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன அவரது 20 வயதான பெண், அவரது தாயை தேட ராஜ்குமார் சுக்லா வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
3 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண்:
அங்கு சென்ற அந்த இளம்பெண் நீண்ட நேரமாக வீட்டின் கதவை தட்டியுள்ளார். ஆனால், யாரும் திறக்காததால் கதவை உடைத்துவிட்டு உள்ளே சென்றிருக்கிறார். அங்கு ஒரு அறையில் அவரது தாய் மூன்று துண்டுகளாக வெட்டப்பட்டு கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மூன்று துண்டுகளாக வெட்டப்பட்டுள்ளது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, பெண்ணை பாலியல் வன்கொமை செய்து கொலை செய்தது ராஜ்குமார், அவரது சகோதரர் பௌவா சுக்லா மற்றும் ராமகிருஷ்ண சுக்லா என்பது தெரியவந்தது. இவர்கள் மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
இதனிடையே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், இந்த சம்பவம் தொடர்பாக மாநில அரசை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது, ”உத்தர பிரதேசத்தில் ஒரு தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான கொலை செய்யப்பட்ட செய்தி எனது இதயத்தை உலுக்குகிறது. இதனால் அம்மாநில பெண்கள் அங்கு பயத்துடன் உள்ளனர். பெண்கள் பாஜக அரசின் மீதான நம்பிக்கையை முற்றிலும் இழந்துவிட்டனர்” என்றார்.