உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் பகுதியில் கழிவறை இருக்கையை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட தலித் நபர் ஒருவர் தாக்கப்பட்டு, முகத்தில் கருப்பு மை பூசப்பட்டு, தலை மொட்டையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


செவ்வாய்கிழமை அன்று உள்ளூர் பாஜக தலைவர் ராதேஷ்யாம் மிஸ்ரா மற்றும் அவரது உதவியாளர்கள் இருவர், ராஜேஷ் குமாரை கம்பத்தில் கட்டி வைத்து, அவரது முகத்தில் கருப்பு மை பூசி பின்னர் தாக்கியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஹார்டி பகுதியில் ஒரு வீட்டில் கழிப்பறையில் உள்ள இருக்கையை திருடியதாக ராஜேஷ் குமார் மீது குற்றம் சாட்டினர்.


30 வயது தினக்கூலி தொழிலாளியான ராஜேஷ் குமாரை ஒரு கும்பல் தாக்கி, அவரது முகத்தில் கருப்பு மை பூசி, தலையில் மொட்டையடிக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. மிஸ்ரா தப்பியோடிவிட்டார். ஆனால் அவரது இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


ராஜேஷ் குமார் மீது தாக்குதல் நடத்தப்படும் காட்சிகளில், அவரது தலை மொட்டையடிக்கப்பட்டு முகத்தில் கருப்பு மை பூசப்பட்டபோது ஒரு கூட்டம் உற்சாகமாக கரகோஷம் எழுப்புவதை அதில் காணலாம். உள்ளூர் பாஜக தலைவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள், சாதிவெறி கருத்துக்களை தெரிவித்ததாக ராஜேஷ் குமார் குற்றம் சாட்டி உள்ளார்.


தாக்குதல் நடத்தியதாகவும் மிரட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்களைத் தண்டிக்கும் கடுமையான சட்டத்தின் கீழும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "2 பேர் கைது செய்யப்பட்டு, மூன்றாவது குற்றவாளியைத் தேடி வருகிறோம். அவர் திருடியதாக சந்தேகம் இருந்தால், அவர்கள் காவல் நிலையத்திற்கு வந்திருக்க வேண்டும்" என்றார்.


பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் சாதியத்திற்கு எதிராக பல தலைவர்கள் போராடினாலும், அது ஒழிந்தபாடில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக வன்கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட வருகிறது. அதன் தொடர்ச்சியாக, சாதிய ஆணவ படுகொலைகள் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கு முற்றிப்புள்ளி வைத்தபாடில்லை. 


சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்புகளையும் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்த வந்த போதிலும், காவல்துறை மெத்தனமான நடந்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


இதற்கென தனி சட்டம் இயற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழ்நாட்டில், இளவரசன், கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்குகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. முற்போக்கு மாநிலம் எனக் கூறப்படும் தமிழ்நாட்டிலேயே இதுபோன்ற கொலைகள் நடைபெறுவது பிரச்சினையின் தீவிரத்தன்மை நமக்கு உணர்த்துகிறது.