கடல் அட்டை கடலின் தூய்மையை உறுதி செய்ய முக்கிய பங்கு வகிக்கிறது. மண்ணுக்கு எப்படி  மண் புழு உதவுகிறதோ, கடலின் வளத்தை பெருக்க 'கடல் அட்டை' உதவுகிறது. இதனால் தான் பல நாடுகள் இதனை பிடிக்க தடை விதித்துள்ளது. கடல் அட்டை அழியக்கூடிய விளிம்பிலோ, அரியவகை உயிரினம் என்கிற பட்டியலிலோ இல்லை. இதன் குணங்கள் பல்வேறு சுற்றுச்சூழல் பயன்களை தருவதே காரணம்.  ஆனால் சீனா, இலங்கை, வங்காள தேசம் ஆகிய நாடுகளில் இவற்றைப் பிடிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.



 

இலங்கையில் கடல் அட்டையை அதிகப்படுத்த பண்ணை முறையில்  அந்நாட்டு அரசு மானியம் முதற்கொண்டு வழங்குகிறது. ஆனால், ஆரோக்கியமான கடல் அட்டைகள் கிடைப்பது கடலில் மட்டுமே. அதனால்தான் தமிழ்நாட்டில் இருந்து இலங்கைப் பகுதிகளுக்கு அதிகமான எண்ணிக்கையில் அவை கடத்தப்பட்டு வருகின்றன. இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை வழியாக பல்வேறு இடங்களுக்கு கடல் அட்டையை கடத்தலாம் என்பதால் இராமேஸ்வரம் பகுதியையே கடல் அட்டை கொள்ளைக்கு ஹாட் ஸ்பார்ட்டாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் முழு ஊரடங்கிற்கு பின் இராமேஸ்வரம் பகுதியில் தொடர்ந்து டன் கணக்கில் கடல் அட்டை பிடிபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 



 

இந்நிலையில் இது குறித்து இராமநாதபுரம் மண்டபம் பகுதி வனச் சரகர் வெங்கடேஷ் நம்மிடம், “கடல் அட்டை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்துவதால் அதிகளவு பணம் கிடைக்கும் என சட்ட விரோதமாக கடத்தப்படுகிறது. வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரையில் சிறையில் அடைக்கப்படுவார்கள். தற்போதைய முழு ஊரடங்கின் போது மீன் பிடி தடைக்காலம் என்பதால் கடல் அட்டை திருட்டு இல்லாமல் இருந்தது. தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களில் மண்டபம் பகுதியில் மட்டும் சுமார் 3 ஆயிரம் கிலோ கடல் அட்டைகள் பிடிபட்டுள்ளது. அதே போல்  சுமார் 8 லட்சம் மதிப்புள்ள மூன்று வல்லத்தை பிடித்துள்ளோம். கடல் வாழ் உயிரினங்கள் பாதுகாக்கும் நோக்கில் மாதம், மாதம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை செய்துவருகிறோம். கடல் அட்டை உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களுக்கு எதிராக செயல்படும் நபர்கள் மீது சட்டத்திற்கு உட்பட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.






 

”கடல் அட்டை திருட்டு பல இடங்களில் அதிகரித்துள்ளது. ஆசிய பணக்கார ஹோட்டல்களில் இந்த உணவு வழங்கப்படுகிறது. மேலும் கடல் அட்டையில் உள்ள ’காண்டிரைட்டின் சல்பேட்’  கீழ்வாத நோய், நுரையில் உள்ளிட்ட பல்வேறு பிரச்னையை சரி செய்வதாக நம்ப வைக்கப்படுவதால் இதற்கு டிமாண்ட் எப்போதும் இருக்கிறது. கடல் கடந்து தான் விற்பனை செய்யவேண்டும் என்பதால் தான் அதிகளவு கடல் அட்டைகள் பிடிக்கப்படுகிறது. கடத்தப்படும் கடல் அட்டைகள் பிடிபட்டால் கடத்தல்காரர்களுக்கு அதிகளவு தண்டனை வழங்கப்படும். கடல் அட்டை பிடிப்பது கடல் வளத்திற்கு பாதிப்பு ஏற்படும். எனவே இது போன்ற சட்ட விரோதத்தில் ஈடுபட்டு கடல் வளத்தை அழிக்க வேண்டாம்” என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டனர்.