கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா பகுதியில் உள்ள ஐம்பதுக்கு மேற்பட்ட கிராமங்களில் தற்போது பெய்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம், பருத்தி ஆகிய பயிர்களை விதைத்துள்ளனர். இப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து மான், மயில், காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்து காணப்படுகின்றன. அவ்வப்போது இந்த விலங்குகள் விவசாயிகளின் விளை பயிர்களை தின்று நாசம் செய்வது உண்டு. அதற்காக இரவு நேரங்களில் விவசாயிகள் காவல் காத்து வருவார்கள்.

 

தற்போது விதை விதைக்கும் காலம் நடந்து வருவதால் இப்பகுதி காடுகளில் வாழும் மயில்கள் விவசாயிகள் விதைத்த மக்காச்சோளத்தை பூமியிலிருந்து கொத்தி தின்று வருகின்றன. இடைச்செருவாய் பாளையம் பகுதியில் விவசாயிகள் விதைத்த மக்காச்சோளத்தை ரசாயனம் கலந்து விதைத்துள்ளனர். இதற்கு காரணம் பூமியில் விதைத்தவுடன் அந்த விதையை பூச்சிகள் வண்டுகள் தின்றுவிடக்கூடாது என்பதற்காக ரசாயனம் கலந்து விதைத்துள்ளனர். அப்படி விதைக்கப்பட்ட விதையை நேற்று முன்தினம் அப்பகுதி காடுகளில் வாழ்ந்து வரும் மயில்கள் அந்த மக்காச்சோள விதைகளை தங்களது கூர்மையான மூக்கால் பூமியில் இருந்து தோண்டி தின்றுள்ளன.

 


 

மக்காசோள விதையைத் தின்ற ஐந்து மயில்கள் துடிதுடித்து இறந்து கிடந்துள்ளன. இந்த தகவல் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் சவுந்தர், கிராம உதவியாளர் கொளஞ்சி மூலம் வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர். இதையடுத்து மயில்கள் இறந்து கிடந்த இடத்திற்கு வன அலுவலர் ரவி, வனவர்கள் சங்கர், பாலகிருஷ்ணன் விரைந்து சென்று மயில்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து பிறகு அடக்கம் செய்தனர். இது குறித்து அவர்கள் தீவிர விசாரணையில் பாளையத்தைச்சேர்ந்த பெருமாள் மகன் சந்திரன் (58) தனது வயலில் விதைத்திருந்த மக்காச்சோளத்தை மயில் சேதப்படுத்தியதால் குருணை மருந்தை மக்காச்சோளம் விதைத்து இருந்த நிலத்தில் தூவியுள்ளது தெரியவந்தது. இதனை சாப்பிட்ட ஒரு பெண் மயில் உட்பட 5 மயில்கள் பரிதாமாக உயிரிழந்துள்ளது.
  

 

தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி இறந்த மயில்களை இடைச்செருவாயில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று மெயில்களை உடற்கூறு ஆய்வு செய்து தடையங்களை விழுப்புரத்தில் உள்ள தடைய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். குருணை மருந்து வைத்து மயில்களை கொன்ற விவசாயி சந்திரனை கைது செய்து திட்டக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி கொல்லப்பட்ட மயில்கள் காப்புக்காட்டில் புதைக்கப்பட்டன.