உத்திரபிரதேச மாநிலத்தில்  சிகிச்சை என்ற பேரில் மூன்று பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த 
 போலி சாமியார் கைது செய்யப்பட்டிருக்கிறார்.


நள்ளிரவு 12 மணிக்கு நடத்தப்பட்ட பூஜையில் சிக்கிய பெண்கள் :


உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோ மாவட்டத்தில் உள்ள மச்சிலி பகுதியில் வசித்து வருபவர் ஷியம்பிஹாரி. இவர் அந்த பகுதியில் தீராத நோய்களை தீர்த்து வைப்பதாக கூறி இரவு நேரங்களில் சில அமானுஷ்ய வேலைகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. அதனை நம்பி மூன்று பெண்கள் சாமியார் ஷியம்பிஹாரியை அனுகியிருக்கின்றனர். அவரும் நான் உங்களுக்கான பிரச்சினைகளை சரி செய்துவிடுவேன், பூஜைக்கான செலவிற்கு நீங்கள் பணம் கொடுக்க வேண்டும் என கூறி 7 ஆயிரத்திற்கும் மேல் அந்த பெண்களிடம் இருந்து பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண்கள் மூவரையும் நள்ளிரவு 12 மணிக்கு ஊரில் உள்ள அரச மரத்தடிக்கு வர சொல்லியிருக்கிறார். தங்களது பிரச்சினைகளை எல்லாம் ஒரே இரவில் மந்திரவாதி தீர்க்க போகிறார் என நம்பி சென்ற மூன்று பெண்களுக்கு சில போதை பொடிகளை பிரசாதம் , பூஜை என்ற பெயரில் கொடுத்திருக்கிறார் போலி  மந்திரவாதி ஷியம்பிஹாரி. அதனை சாப்பிட்ட பெண்கள் மூவரும் சிறிது நேரத்தில் போதையில் மயங்கியிருக்கிறார்கள் . அதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மந்திரவாதி மூன்று பெண்களையும் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.




போலி சாமியார் கைது :


மந்திரவாதியின் உண்மையான முகத்தை அறிந்த பெண்கள் , அவரிடம் செலவு செய்த  7 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுக்குமாறு கேட்டிருக்கின்றனர் . அதை கொடுக்க போலி சாமியார் மறுக்கவே , பாதிக்கப்பட்ட மூன்று பெண்களும் போலீசாரிடம் சென்று நடந்தவற்றை கூறியிருக்கின்றனர். பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்  போலி சாமியார் ஷியம்பிஹாரியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.




இதே போன்றதொரு சம்பவம் :


இதே போலத்தான் சமீபத்தில் கர்நாடகாவிலும் போலி சாமியார் ஒருவரை காவல்துறையில் போக்ஸோ வழக்கில் சிறையிலடைத்தனர். கர்நாடகாவில் உள்ள முருகா மடத்து சாமியார் சிவமூர்த்தி அங்கு விடுதியில் தங்கி பயிலும் மாணவிகளை தொடர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அம்பலமானது. இதனை அறிந்த குழந்தைகள் நலக் குழு (சிடபிள்யூசி) அளித்த புகாரின் பேரில் சிவமூர்த்தி மீது நசர்பாத் போலீஸார் போக்சோ (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். வழக்கு பதிவு செய்யப்பட்டு  கிட்டத்தட்ட 7 நாட்களுக்கு பிறகு ஆதாரங்களின் அடிப்படையில் சிவமூர்த்தியை கைது செய்த போலிசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.