டென்னிஸ் உலகில் மிகவும் முக்கியான கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்று யுஎஸ் ஓபன். ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடர் இது என்பதால் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தத் தொடருடன் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இதனால் இவர் சாம்பியன் பட்டத்துடன் விடைபெறுவாரா என்று ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருந்தனர்.


இந்நிலையில், அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் 3வது சுற்றில் தோல்வி அடைந்து செரீனா வில்லியம்ஸ் வெளியேறினார். ஆஸ்திரேலியாவின் அஜ்லா டோம்லஜனோவிக்கிடம் 7-5, 6-7, 6-1 என்ற செட் கணக்கில் செரீனா வில்லியம்ஸ் தோல்வியை தழுவினார். ஏற்கனவே மகளிர் இரட்டையர் பிரிவில் தோல்வியடைந்த நிலையில், ஒற்றையர் பிரிவிலும் தோல்வியடைந்தார். 






ஓய்வு பெற்றார் செரீனா வில்லியம்ஸ் : 


23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற அமெரிக்காவை சேர்ந்த செரீனா வில்லியம்ஸ் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். தான் பங்கேற்ற கடைசி அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவு மற்றும், ஒற்றையர் பிரிவிலும் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 






டென்னிஸ் உலகில் செரீனா:


டென்னிஸ் விளையாட்டில் செரீனா வில்லியம்ஸ் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். குறிப்பாக இவர் 23 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்று அசத்தியுள்ளார்.  அத்துடன் 14 இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், 2 கலப்பு இரட்டையர் பிரிவிலும் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்றுள்ளார். 


இவை தவிர மகளிர் டபிள்யூடிஏ 73 ஒற்றையர் பட்டங்களையும், 23 இரட்டையர் பிரிவு பட்டங்களையும் வென்று அசத்தியுள்ளார். இவற்றுடன் சேர்ந்து 4 ஒலிம்பிக் பதக்கங்களையும் வென்றுள்ளார். இவருடைய நீண்ட நெடிய டென்னிஸ் வாழ்க்கையில் 319 வாரங்கள் சர்வதேச வீராங்கனை பட்டியலில் முதல் இடத்தில் இருந்து சாதனைப் படைத்தார். 


செரீனா வில்லியம்ஸ் கடைசியாக 2017ஆம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓபன் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றார். அதன்பின்னர் இவர் எந்த ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்றதில்லை.