உளுந்துார்பேட்டை அருகே திருமணத்திற்கு மீறிய உறவை கண்டித்த கணவரை கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் கள்ளக்காதலனை காவல்துறையினர் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட் டம், உளுந்துார்பேட்டை அடுத்த செம்மணங்கூரைச் சேர்ந்த தங்கவேல் மகன் 34 வயதான சந்தோஷ்குமார். இவர் அதே பகுதியில் மளிகைக் கடை வைத்துள்ளார். இவரது மனைவி வசந்த குமாரி. இந்த தம்பதிக்கு 12, 8, 6 வயதில் மகள்கள் உள்ளனர்.
கடந்த, 29ம் தேதி முதல் சந்தோஷ்குமார் மாயமானார். உளுந்துார் பேட்டை போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், உளுந்துார்பேட்டை, கெடிலம் ஆற்றுப் பாலம் அருகே எரிந்த நிலையில் சந்தோஷ்குமார் உடல் கண்டெடுக்கப்பட்டது.
சந்தோஷ்குமாரின் உறவினர்கள் கொடுத்த தகவலின்படி, ஏமப்பேர் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் கார் டிரைவர் முருகன் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் சந்தோஷ் குமாரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
போலீசார் கூறியதாவது, எட்டு மாதங்களுக்கு முன், கள்ளக்குறிச்சியில் உள்ள மருத்துவமனைக்கு சந்தோஷ்குமார் மனைவி வசந்தகுமாரி வாடகை காரில் சென்று உள்ளார். முருகன் காரை ஓட்டியுள்ளார். அப்போது, வசந்தகுமாரி யிடம், அவரது மொபைல் போன் எண்ணை வாங்கியவர், அடிக்கடி பேசி வந்துள்ளார்.
இதனால், சந்தோஷ் குமாரிடமும் பழக்கம் ஏற்பட்டு, குடும்ப நண்பராக பழகி வந்துள்ளார். நாளடைவில், முருகன், வசந்தகுமாரி இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவருக்கும் கள்ளத் தொடர்பு இருப்பது, 10 நாட்களுக்கு முன் சந்தோஷ்குமாருக்கு தெரிந்து மனைவி மற்றும் முருகனை கண்டித்துள்ளார்.
இதையடுத்து, சந்தோஷ் குமாரை தீர்த்துக்கட்ட இருவரும் முடிவு செய்தனர். இருவரின் திட்டப்படி, மகளின் ‘ஆதார்' கார்டில் திருத்தம் செய்ய வேண்டும் என்று வசந்தகுமாரி தெரிவித்துள்ளார். கடந்த மாதம், 29-ல், மாற்றித் தருவதாக கூறிய டிரைவர் முருகன், சந்தோஷ்குமாரை உளுந்துார் பேட்டைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
வரும் வழியில், முருகனின் மற்றொரு வாடகை வீட்டில், சந்தோஷ்குமார், முருகன், அவரது உறவினரான ஏமப்பேரைச் சேர்ந்த மாயக்கண்ணன் மகன் ஆதி ஆகியோர் மது அருந்தியுள்ளனர். அப்போது, ஆதி பிடித்துக்கொள்ள, மது பாட்டிலை உடைத்து சந்தோஷ் குமாரை, முருகன் குத்திக்கொலை செய்தார். உடலை மினி வேனில் ஏற்றி, உளுந்துார்பேட்டை, கெடிலம் ஆற்றுப்பாலம் அருகே வீசி, பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர் என காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, உளுந்துார்பேட்டை போலீசார், முருகன், சந்தோஷ்குமார் மனைவி வசந்தகுமாரி ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள ஆதியை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்