விழுப்புரம்: செஞ்சி அருகே 16 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 2 இளைஞர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர். விழுப்புரம் அருகே 16 வயது சிறுமி 11ஆம் படித்து வந்தார். இவரது பெற்றோர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். எனவே புதுச்சேரியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் தங்கி இருந்த மாணவி சொந்த ஊருக்கு வந்தார். அப்போது பெரியம்மா குப்பு கவனிப்பில் பள்ளிக்கு சென்றுவந்தார்.
உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உடனே உறவினர்கள் அந்த சிறுமியை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். மாணவியின் வயிறு பெரியதாக இருந்ததால் சந்தேகம் அடைந்த டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்தனர். அப்போது அந்த மாணவி 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 81), இளையராஜா (28), மோகன் ஆகியோரை கைது செய்தனர். இதில் மோகன் மாணவிக்கு அண்ணன் உறவு முறையாவார். இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த சம்பவத்துக்கு மாணவியின் பெரியம்மா குப்பு உடந்தையாக இருந்துள்ளார். இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் இந்த சம்பவத்தில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (25), பிரபு (37), பாபு (22), சத்யராஜ் (28) ஆகியோரும் மாணவியை வன்புணர்வு செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் அம்மாணவியின் அண்ணன் முறையுள்ள ஒருவரும் பாலியல் கொடுமை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கில் அண்ணன் முறையுள்ள மோகன் (32) மற்றும் இளையராஜா (28) ஆகிய 2 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய எஸ்பி ஸ்ரீ நாதா ஆட்சியருக்கு பரிந்துரைத்தார். இதனை பரிசீலித்த விழுப்புரம் ஆட்சியர் அந்த 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து, விசாரணை கைதியாக கடலூர் மத்திய சிறையில் இருந்து வந்த மோகன்மற்றும் இளையராஜா ஆகியோரிடம் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை சிறை ஊழியர்கள் மூலம் போலீஸார் வழங்கினர்.
11ஆம் வகுப்பு மாணவி கர்ப்பமான வழக்கில் திடீர் திருப்பம் - மேலும் 5 பேர் போக்சோவில் கைது