மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில்  2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில், பல்வேறு பகுதிகளில் பூட்டிய வீடுகளை அடையாளம் தெரியாத நபர்கள் குறிவைத்து, தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் செம்பனார்கோவில் காவல் சரகத்திற்கு உட்பட்ட விளநகரில் சாந்தகுமார் என்பவர் வீட்டில் அவரது குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்ததை அறிந்த கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 100 சவரன் தங்க நகைகளை  கொள்ளையடித்து சென்றனர். இதேபோல் மேலும் பல பூட்டிய வீடுகளில் அடையாளம் தெரியாத நபர்கள் நோட்டமிட்டு தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். 




இந்த தொடர் கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்ததை அடுத்து  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் மேற்பார்வையில், குற்றப்பிரிவு உதவி காவல் ஆய்வாளர் இளையராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர், கொள்ளையர்களை தீவிரமாக தேடிவந்தனர்.  பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.




அதில் கிடைத்த தகவலை வைத்து விசாரணை செய்ததில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நபர்கள் மயிலாடுதுறை கல்லறை தோப்புத் தெருவை சேர்ந்த மருது என்கிற விஜயபாஸ்கர், கோயம்புத்தூரைச் சேர்ந்த சண்முகம் என்பதும், மேலும் கேரளாவை சேர்ந்த இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து மருது மற்றும் விஜயபாஸ்கர் ஆகிய இருவரையும் கைது செய்த தனிப்படை காவல்துறையினர் அவர்களிடமிருந்து 256 கிராம் தங்க நகைகள் மற்றும் ஒன்றரை கிலோ எடை கொண்ட இரண்டு வெள்ளி குத்து விளக்குகள், திருட்டுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய ஆயூதங்களை கைப்பற்றி, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.


மேலும் இந்த சம்பவங்களில் தொடர்புடைய இவர்களின் நண்பர்களான கேரள மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு நபர்களை தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X




மேலும் சற்று வசதி படைத்தவர்கள் வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்திக் கொள்வது அவசியமானது என்றும், அவ்வாறு கண்காணிப்பு கேமரா பொருத்தி கொள்ளும் சூழலில் இதுபோன்ற திருட்டு சம்பவங்களை தடுக்கலாம் எனவும், மீறி திருட்டு சம்பவம் நடைபெற்றாலும் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் கண்டு விரைவாக பிடிக்க இந்த சிசிடிவி காட்சிகள் உதவும் என்பது காவல்துறையின் கருத்தாக உள்ளது. பணம், நகை கொள்ளை போன பின்பு அதனை இழந்து வருத்துவதை காட்டிலும் ஒரு சிறிய தொகையினை சிசிடிவி பாதுகாப்புக்காக செலவிட்டு, கண்காணிப்பு கேமரா பொருத்தி கொள்வது அனைவருக்கும் பாதுகாப்பான ஒன்று என காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.