மாற்று திறனாளிகளை ஊக்கப்படுத்தும் விதமாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒலிம்பிக் தொடரை போலவே மாற்று திறனாளிகளுக்காக பாராலிம்பிக் நடத்தப்பட்டு வருகிறது. ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு பெற்றவுடன் பாராலிம்பிக் தொடர் நடத்தப்படுவது வழக்கம். இதன்படி பாரிஸ் நகரில் ஒலிம்பிக் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், பாராலிம்பிக் தொடர் இன்று தொடங்குகிறது.


இன்று தொடங்கும் பாராலிம்பிக்:


17வது முறையாக நடைபெறும் இந்த பாராலிம்பிக் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த பாராலிம்பிக்கில் மொத்தம் 184 நாடுகள் பங்கேற்கின்றன. இதில் மொத்தம் 22 விளையாட்டு போட்டிகளில் பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்படுகிறது. மொத்தம் 4 ஆயிரத்து 440க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்திய நேரப்படி பாராலிம்பிக் இரவு 11.30 மணிக்கு தொடங்குகிறது. இதை ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி மற்றும் ஜியோ சினிமாவில் பார்க்கலாம்.


கடந்த முறை இந்திய வீரர்களும், வீராங்கனைகளும்  பாராலிம்பிக்கில் அசத்தினார்கள். இதனால் இந்த முறையும் இந்தியா அசத்தும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். இந்தியா சார்பில் மொத்தம் 32 பெண்கள் உட்பட 84 பேர் கலந்து கொள்கின்றனர். இதுவரை நடைபெற்ற பாராலிம்பிக்கில் அதிக இந்திய வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்பது இதுவே முதன்முறை ஆகும். கடந்த முறை 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் உள்பட 19 பதக்கங்களை வென்று இந்தியா அசத்தியது. இதனால் இந்த முறையும் இந்தியா கடந்த முறையை காட்டிலும் அதிக பதக்கங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நட்சத்திர வீரர்கள்:


இந்தியாவின் நடச்சத்திரங்களாக கடந்த முறை தங்கம் வென்ற அவனி லேகரா, தமிழக வீரர் மாரியப்பன், ஷீத்தல் தேவி, தீப்தி உள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து மாரியப்பன் ( உயரம் தாண்டுதல்), துளசிமதி, மனிஷா, நித்யஸ்ரீ சிவன், சிவராஜன் சோலைமலை ( பேட்மிண்டன்) கஸ்தூரி ராஜாமணி ( வலு தூக்குதல்) ஆகிய 6 பேர் உள்ளனர்.


இதில் தமிழக வீரர் மாரியப்பன் ரியோவில் நடந்த பாராலிம்பிக்க்கில் தங்கமும், ஜப்பானில் நடந்த பாராலிம்பிக்கில் வெள்ளியும் வென்றவர். ஒலிம்பிக்க்கில் ஆதிக்கம் செலுத்தும் சீனா, பாராலிம்பிக்கிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. சீனா இந்த பாராலிம்பிக்க்கில் மொத்தம் 284 பேரை அனுப்பியுள்ளது. கடந்த பாராலிம்பிக்கில் 96 தங்கம் உட்பட 207 பதக்கத்துடன் முதலிடத்தை கைப்பற்றியது என்பது குறிப்படத்தக்கது. இன்று நடக்கும் தொடக்க விழாவை காண 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.