திருவண்ணாமலை மாவட்டம் கருந்துவம்பாடி கிராமத்திற்கு உட்பட்ட கொளக்கரவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர், அவரது மகன் ரஞ்சித் குமார் மீது தனக்கு சொந்தமான நிலத்தை தான செட்டில்மென்ட் ஆக எழுதி வைத்துள்ளார். இந்நிலையில் தனது பெயரில் உள்ள பட்டாவை தனது மகன் ரஞ்சித் குமார் பெயருக்கு பட்டா பெயர் மாறுதல் செய்ய கருந்துவம்பாடி கிராம நிர்வாக அலுவலர் கலைவாணனை தொடர்பு கொண்டுள்ளார். அதற்கு கலைவாணன் சங்கரிடம் பட்டா பெயர் மாறுதல் செய்ய ரூபாய் 6000 லஞ்சம் கேட்டுள்ளார்.


இந்நிலையில் பட்டா பெயர் மாறுதல் செய்ய 6000 ரூபாய் லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் மீது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிக்கு பரிந்துரை செய்தார் எனக் கூறப்படுகிறது.


 




 


இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சங்கரிடம் நடத்திய விசாரணையின் பேரில் இன்று சங்கரை லஞ்சம் கேட்ட விஏஓ கலைவாணருக்கு லஞ்சப் பணம் 5500 ரூபாய் தருவதாக கூறியுள்ளார். மீண்டும் கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொண்டு பணம் தயாராக உள்ளதாக செல்போன் மூலம் சங்கர் தெரிவித்துள்ளார். கலைவாணன் பணத்தினை கிராம உதவியாளர் அண்ணாமலையிடம் கொடுத்து விடுங்கள் என கூறி அண்ணாமலையின் செல்போன் எண்ணை தெரிவித்துள்ளார்.


இதனைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி கிராம உதவியாளர் அண்ணாமலையை தொடர்புகொண்டபோது அண்ணாமலை அவரது சொந்த ஊரான நாயுடுமங்கலம் விவசாய நிலத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் சங்கர் ஆகியோர் விவசாய நிலத்தில் நின்றுகொண்டிருந்த கிராம உதவியாளர் அண்ணாமலையிடம் ரசாயனம் தடவிய லஞ்சப்பணம் ரூபாய் 5 ஆயிரத்து 500 கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கிராம உதவியாளர் அண்ணாமலையை கையும் களவுமாக பிடித்தனர்.


 




 


இதனைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி வேல்முருகன் மற்றும் ஆய்வாளர் பிரபு, கோபிநாத்,முருகன், ரஜினிகாந்த் உள்ளிட்ட அடங்கிய 10 நபர்கள் கொண்ட குழுவினர் கையும் களவுமாக பிடித்த கிராம உதவியாளர் அண்ணாமலையை கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.மேலும் லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு அவரையும் கைது செய்தனர்.


மேலும் இது தொடர்பாக கிராம உதவியாளர் அண்ணாமலையின் தொலைபேசியில் கிராம நிர்வாக அலுவலர் சங்கர் கொடுக்கும் பணம் 5500 வாங்கி வைத்துக் கொள் என்ற ஆடியோ ஆதாரத்தினையும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பின்னர் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தினால் கருத்துவாம்பாடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது