சேலம் மாவட்டம் இரும்பாலை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின்றனர். இவர் கடந்த பிப்ரவரி மாதம் சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்புகள் தேடிவந்தார், சமூக வலைதளங்களில் துணை நடிகை தேவை என்று வெளிவந்த விளம்பரத்தை பார்த்து சேலம் ஏ.வி.ஆர். ரவுண்டானா பகுதியில் இயங்கி வந்த சினிமா நிறுவனத்தின் அலுவலகத்துக்கு சென்றார். அந்த அலுவலகத்தில் சேலம் மாவட்டம் எடப்பாடி வீரப்பன்பாளையத்தை சேர்ந்த வேல் சத்ரியன் (38), விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ஜெய ஜோதி (23) ஆகியோர் தாங்கள் தயாரிக்கும் புதிய படத்தில் வாய்ப்பு தருவதாகவும் அதற்கு ரூ. 30 ஆயிரம் பணம் தரவேண்டும் என கேட்டுள்ளனர். ஆனால் அவர் தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார்.
இதனையடுத்து இரும்பாலையை சேர்ந்த பெண் கம்பெனியில் வேலைக்கு சேர்த்துள்ளனர். ஆனால் கம்பெனியில் மூன்று மாதம் வேலைபார்த்தும் அதற்கான சம்பளத்தை அவர்கள் வழங்கவில்லை, சம்பளத்தை கேட்டபோது கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர். மேலும் கம்பெனியின் ஒரு அறையில் பெண்களின் ஆபாசமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அங்கு சில பெண்களை வைத்து படம் எடுப்பதற்காக ஏற்பாடு செய்து வந்ததும் தெரியவந்ததை அடுத்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், அதன்பேரில் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் சுப்புலட்சுமி மற்றும் காவல்துறையினர் அங்கு சென்று ஜெய ஜோதி மற்றும் வேல் சத்ரியன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஆபாசமாக நோ என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்க இருப்பதும் தெரியவந்தது. மேலும் சமூக வலைதளங்களில் வேல் சத்ரியன் பெண்களுடன் டிக் டாக் செய்து பதிவிட்டு இருந்தார். அதற்காக இளம் பெண்களை தேர்வு செய்தது தெரிந்தது. பின்னர் இரும்பாலையை சேர்ந்த பெண் அளித்த புகாரின் பேரில் கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் அந்த கம்பெனி அலுவலகத்தில் இருந்த லேப்டாப், செல்போன், கேமரா ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர் . அதில் சில பெண்களின் ஆபாச படங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இவர் 300 க்கும் மேற்பட்ட பெண்களிடம் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு வழங்குவதாக கோரி ஆபாசமாக படம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சம்பவ இடத்தில் சேலம் சூரமங்கலம் உதவி ஆணையாளர் நாகராஜ் தலைமையில் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதன் பின்னணியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? வேல் சத்ரியனுக்கு உதவியாக வேறு யாராவது உள்ளனரா என்பது குறித்து சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தொடர்பு சோதனை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிலர் முன்வருவதாகவும், பாதிக்கப் பட்டவர்கள் தாமாக முன்வந்து புகார் அளிக்கலாம், அவர்கள் குறித்த விவரங்கள் வெளியே வராத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இளம் பெண்களிடம் சினிமா ஆசை காட்டி ஆபாச புகைப்படம் எடுத்து பணம் பறிக்கும் சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.