விழுப்புரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு: மற்றொரு விபத்தில் மருத்துவக் கல்லூரி துப்புரவு பெண் பணியாளர் காயம். உறவினர்கள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியல்.


விழுப்புரம் அடுத்த ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலா(45). இவர் முண்டியம்பாக்கம் பகுதியில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இன்று பணி முடிந்து வீட்டுக்கு செல்லும்போது தேசிய நெடுஞ்சாலலையை கடக்க முற்படும்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் மோதியதில் பெண் படுகாயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் காயமடைந்த கலாவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர், அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இதனால் ஆத்திரமடைந்த ஊழியர்கள் மற்றும் பெண்ணின் உறவினர்கள் முண்டியம்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து உறவினர்கள் மறியலை கைவிட்டனர். மறியல் காரணமாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரைமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக விக்கிரவாண்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதே போன்று விழுப்புரம் அடுத்த அய்யம்பாளையம் பகுதியில் செஞ்சியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த இருசக்கர வாகனத்தின் மீது, விழுப்புரத்தில் இருந்து செஞ்சி நோக்கி சென்ற கார் மோதியதில் விழுப்புரம் முத்தோப்பு பகுதியைச் சேர்ந்த வசந்தபாலா(28). சூர்யா(27) இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. உடலை கைப்பற்றி விழுப்புரம் தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.