சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் அருகே உள்ள கொல்லம்பட்டறை பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (35). மூட்டை தூக்கும் தொழிலாளி ஆவார். இவரது மனைவி சித்ரா. இவர்கள் இருவருக்கும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சிலமாதங்களுக்கு முன்பாக சித்ரா வேறொருவரை திருமணம் செய்துகொண்ட நிலையில், மூன்று குழந்தைகளுடன் சித்ரா தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். தினசரி கண்ணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி வழக்கம் போல் பணிக்கு சென்று விட்டு, வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் அருகே வந்தபோது கண்ணனை வீட்டின் மேற்கூரைக்கு பயன்படுத்தப்படும் ஓட்டை கொண்டு தலையில் மர்ம நபர்கள் கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் கண்ணனின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு, சடலத்தை சிறிது தூரம் இழுத்துச் சென்று வீசிவிட்டு தப்பியோடி உள்ளனர். பின்னர் காலை இவ்வழியாக வந்த பொதுமக்கள் சிலர் சடலமாக கண்ணன் கிடப்பதைக் கண்டு கிச்சிப்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தி, தடயங்களை சேகரித்தனர். இந்த கொலையை செய்தவர்கள் யார்? பணத்திற்காக கொலை செய்தார்களா? வேறு ஏதாவது முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றுள்ளதா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் அந்தப் பகுதியில் சுற்றியுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து இரண்டு சிறுவர்கள் ஓடிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதைத் தொடர்ந்து கிச்சிப்பாளையம் காவல்துறையினர் இரண்டு சிறுவர்களையும் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு இரண்டு சிறுவர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பணத்திற்காக அடித்ததாக கூறியுள்ளனர்.