சீர்காழி அருகே வீட்டில் கள்ளச் சாராயம் விற்ற பெண் உள்ளிட்ட  இருவர் கைது செய்யப்பட்டதுடன், விற்பனைக்கு வைத்திருந்த கள்ளச்சாராயம் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 



தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அனைத்து கடைகளும் மூடப்பட்டு முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தி உள்ளது. குறிப்பாக டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. திங்கள் முதல் ஒரு வார காலம் மளிகை காய்கறி உள்ளிட்ட அனைத்து கடைகளுக்கும் தடைவிதித்து முழு ஊரடங்கு அறிவித்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அனைத்து கடைகளும் திறந்து கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது. இதனால் டாஸ்மார் கடை திறக்கும் என எதிர்பார்த்திருந்த மது பிரியர்களுக்கு டாஸ்மார்க் கடைகள் திறக்கப்படாததால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.



இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்திற்கு அருகே மயிலாடுதுறை மாவட்டம் அமைந்துள்ளதால், காரைக்கால் மற்றும் புதுச்சேரியிலிருந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சாராயம் கடத்தி வரப்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை நடைபெறுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்த சூழலில் சீர்காழி தாலுக்கா முழுவதும் பல்வேறு பகுதியில் புதுச்சேரி சாராயம் விற்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதாவிற்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் சீர்காழியில் தனிப்படை போலீசார் பல்வேறு பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.



சோதனையில்  சீர்காழி அருகே தாடாளன் கோவில், காமராஜபுரம் பகுதியை சேர்ந்த சுமத்திரா (35), மாரிமுத்து (40) ஆகிய இருவரும் வீட்டில் சாராய வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த தெரியவந்தது. அதனை அடுத்து வீட்டில் சோதனை நடத்திய போலீசார் பதுக்கி வைத்திருந்த ஏராளமான கள்ளசாராய பாக்கெட்டுகள் மற்றும் 9,800 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்து, சாராயம் விற்பனை குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



ஒருங்கிணைந்த நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால்  22 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொற்றால் பாதித்து 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் டாஸ்மார்க் கடை, மளிகை, காய்கறி உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ள சூழலிலும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை தங்கு தடையின்றி நடைபெற்று வருவதாகவும், இதனால் மேலும் கொரோனா வைரஸ் தொற்று நகர்ப்புறங்களில் மட்டுமின்றி கிராமப் பகுதிகளிலும் ஏழை எளிய மக்களுக்கு எளிதில் பாதிக்கும் நிலை உள்ளதால், மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் ஊரடங்கை சாதகமாக மாற்றி கள்ளச்சாராயம் விற்பனை செய்வோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவும் போலீசாரை வலியுறுத்தி வருகின்றனர்.