ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்து வருவதாக புகார் எழுந்து வருகிறது.  இது தொடர்பாக பொதுமக்கள், வியாபாரிகள் என  பல்வேறு தரப்பினரும்  தொடர்ந்து காவல்துறையினரிடம் புகார் அளித்து வந்தனர். இதனை தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்பவர்களை கண்டு பிடிப்பதற்கான தீவிர  நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், காஞ்சிரங்குடி விலக்கு சாலையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்ததையடுத்து, கீழக்கரை சப்-இன்ஸ்பெக்டர்  ஆறுமுகத்தரசன் தலைமையிலான போலீசார்  கீழக்கரை அருகே உள்ள  காஞ்சிரங்குடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது காஞ்சிரங்குடி பஸ் ஸ்டாப் அருகே 4 பேர் கொண்ட கும்பல் போலீஸ் வாகனத்தை கண்டதும் ஓட முயற்சித்தனர்.

 



 

இதை அடுத்து உசாரானா  போலீசார் அந்த கும்பலை விரட்டி சென்று மடக்கி பிடித்து கையில் வைத்திருந்த பையை சோதனை செய்தனர் அதில் 2 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்தது. போலீசார் நடத்திய விசாரணையில்  கீழக்கரையில்  சில்லறையாக விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து கஞ்சா வைத்திருந்த  ஏர்வாடி தண்ணீர் பந்தல் முகம்மது (19), கீழக்கரை முகம்மது நசிருதீன் (26), அகமது அசாருதீன் (26), 500 பிளாட்டை சேர்ந்த வாசிம்கான் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இது குறித்து கீழக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியதில் கைது செய்யப்பட்ட முகமது நசுருதீன், முகமது அசாருதீன் ஆகிய இருவரும் இரட்டை சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு சமூக அமைப்புகள் சார்பில் பல்வேறு சமூக சேவை விருதுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 



 

இந்த இரட்டை சகோதரர்கள் பகலில் இலவச ஆம்புலன்ஸ் சேவை செய்து வந்தனர். மேலும்,  கொரானா பரவிய காலங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை அச்சமின்றி துணிச்சலுடன் அடக்கம் செய்தனர். மற்றும் ஆதரவற்றவர்கள் யாரேனும் சாலைகளில் இறந்து கிடந்ததால் அவர்களை எடுத்து கொண்டு சென்று உடல்களை அடக்கம் செய்வது போன்ற சமூக சேவைகள் செய்து சமுதாயத்தில் நல்ல பெயரை எடுத்து, யாருக்கும் எந்த  சந்தேகம் வராத வகையில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இந்த இரட்டைச் சகோதரர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் கீழக்கரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

 



 

சமூகத்தில் பொது மக்களுக்காக சேவை செய்து நன்மதிப்பைப் பெற்றவர்கள் கஞ்சா வழக்கில் சிக்கியிருப்பது கஞ்சா விற்பனையின்  தீவிரத்தை எடுத்துக்காட்டும் விதமாக உள்ளது. எனவே, மாவட்ட காவல்துறையினர் அதி தீவிர நடவடிக்கை எடுத்து கீழக்கரை பகுதி மட்டுமல்லாமல் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும்  கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் இன்றி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து போதைப்பொருள் விற்பனை கும்பலை கைது செய்ய வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.