முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும் அபு தாபியின் டாஸிஸ் என்று அழைக்கப்படும் அபு தாபி கெமிக்கல் நிறுவனமும் TA’ZIZ EDC & PVC திட்டத்தில் பங்குதாரராக சுமார் 2 பில்லியன் டாலர் முதலீடு செய்து ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளன. 


க்ளோர் அல்கலி, எத்லீன் டைக்ளோரைட், பாலிவினைல் க்ளோரைட் முதலானவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையைக் கட்டமைத்து, செயல்படுத்துவதற்காக இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதன் மீதான மொத்த முதலீடு 2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகம் எனக் கூறப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளில் முதல் முறையாக வேதிப் பொருள்கள் இதன்மூலம் உருவாக்கப்படும் நிலையில், இதன் மூலம் பல்வேறு புதிய வருவாய் வழிகள் உருவாவதோடு, உள்ளூர் உற்பத்தியாளர்களுக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.



ரிலையன்ஸ் இந்தியா நிறுவனம் ஏற்கனவே ADNOC என்று அழைக்கப்படும் அபு தாபி தேசிய ஆயில் கம்பெனியுடனும், ADQ என்ற அழைக்கப்படும் அபு தாபி நாட்டைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனத்துடனும் ஒப்பந்தம் வைத்துள்ளது. இவை அபு தாபியின் ருவைஸ் பகுதியில் உள்ள டாஸிஸ் தொழிற்சாலை வேதிப்பொருள்கள் பகுதியில் மேற்கொள்ளப்படும் திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. 


ADNOC என்று அழைக்கப்படும் அபு தாபி தேசிய ஆயில் கம்பெனியின் தலைமையிடத்திற்கு ரிலையன்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைமை மேலாண்மை இயக்குநர் முகேஷ் அம்பானி பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அங்கு இரண்டு நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளும் அதிகாரப்பூர்வமான பங்குதாரர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். 







அதன்பிறகு, முகேஷ் அம்பானி, `இந்த கூட்டுத் தொழிலின் மூலம், இந்தியாவுக்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்துவதன் சான்றாகவும், கூடுதல் பலம் அளிக்கக்கூடிய இதுபோன்ற திட்டங்களை உருவாக்குவதற்கான அளவுகோலாகவும் அமையும்’ எனக் கூறியுள்ளார். 


தொடர்ந்து முகேஷ் அம்பானி, அபு தாபியின் தொழில்துறை மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப அமைச்சரும்,  ADNOC நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருமான சுல்தான் அல் ஜாபருடன் சந்திப்பு மேற்கொண்டார். மேலும், அவருடன், புதிய ஆற்றல்களின் வளர்ச்சி, ஹைட்ரோகார்பன் திட்டத்தில் கார்பன் பயன்பாட்டைக் குறைப்பது முதலான தொழில் துறைகளில் பங்குதாரர்களாக இருப்பதன் வாய்ப்புகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.