கர்நாடகாவில் பிரபல டிவி சீரியல் நடிகர் குத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக திரையுலகில் பிரபலங்களின் மர்ம மரணங்கள், கொலைகள் போன்ற சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை பல பிரபலங்களின் மரணங்கள் இன்றளவும் மர்மமான ஒன்றாகவே உள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் மர்மமான முறையில் உயிரிழந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கடந்த ஜனவரி மாதம் வங்கதேசத்தைச் சேர்ந்த ரைமா இஸ்லாம் ஷிமுகொடூரமாக கொல்லப்பட்டார். அங்குள்ள கெரனிகஞ்ச் பகுதியில் உள்ள பாலம் ஒன்றின் அடிப்படையில் சாக்கு மூட்டையில் அவர் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோல் கடந்த சில வாரங்களுக்கு முன் காஷ்மீரில் நடிகை அமரீன் பட் 2 தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார். இதேபோல் டெல்லியில் வசித்து வந்த ஹரியானாவைச் சேர்ந்த பாடகி சங்கீதா கொடூரமாக கொல்லப்பட்டு 12 நாட்களுக்குப் பின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல் பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார். ஏற்கனவே கொரோனா, உடல் நலக்குறைவால் பிரபலங்கள் மரணித்து வரும் நிலையில் இத்தகைய துர்மரணங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அந்த வகையில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பல்வேறு டிவி சீரியல்களில் நடித்து பிரபலமான சதீஷ் வஜ்ரா என்பவர் தனது மனைவியின் தம்பியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 36 வயதான அவர் பிரபல சீரியல்களில் நடித்து வந்த நிலையில், லகோரி என்ற கன்னட படத்தில் துணை நடிகராக நடித்திருந்தார். இதனிடையே திருமணமான சதீஷ் வஜ்ராவுக்கும், அவர் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் விரக்தியடைந்த அவர் மனைவி சில தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் மனைவி குடும்பத்தினர் சதீஷ் மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். குறிப்பாக தனது அக்கா மரணத்திற்கு காரணம் சதீஷ் தான் என எண்ணிய மைத்துனர் அவரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்