தூத்துக்குடி மாவட்டம் சிவகளையை சேர்ந்தவர் ரவிச்சந்தர். இவர் தற்போது கும்பகோணத்தில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வரை இவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் சார் பதிவாளராக பணியாற்றினார்.


             
                                  
                             

விளாத்திகுளத்தில் பணியாற்றி வந்த காலத்தில் அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. அதன்பேரில் அவரது அலுவலகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அவரது அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.3.5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனைக்கு பிறகே அவர் கும்பகோணத்துக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார்.  


                                  

இந்நிலையில் அவர் விளாத்திகுளத்தில் சார் பதிவாளராக பணியாற்றிய 2016 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்தில் வருமானத்தை மீறி ஏராளமான சொத்துக்கள் சேர்த்ததாக புகார்கள் எழுந்தன. அதன்பேரில் தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை அடிப்படையில் வருமானத்தை மீறி ரூ.1.25 கோடி அளவுக்கு சொத்து சேர்த்திருப்பதாக ரவிச்சந்தர், அவரது மனைவி சுதா, மாமனார் சுந்தர்ராஜ் ஆகியோர் மீது தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார்  வழக்கு பதிவு செய்தனர்.


                                  

இந்த வழக்கு தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் உள்ள ரவிச்சந்தர் மற்றும் அவரது மாமனார் சுந்தர்ராஜ் வீடுகளில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். டிஎஸ்பி ஹெக்டர் தர்மராஜ் மேற்பார்வையில் இரண்டு வீடுகளிலும் ஒரே நேரத்தில் போலீஸார் இரு பிரிவுகளாக சோதனை மேற்கொண்டனர். காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை மாலை வரை நீடித்தது.


                                  

இந்த சோதனையின் போது ரவிச்சந்தர் வருமானத்தை மீறி கோடிக்கணக்கான சொத்துக்களை சேர்த்திருப்பதற்கான ஏராளமான ஆவணங்கள் சிக்கின. ரவிச்சந்தருக்கு சிவகளையில் மட்டும் 5 வீடுகள் இருப்பதும், தூத்துக்குடியின் பிரதான பகுதியான பிரையண்ட் நகரில்  மூன்று மாடி அபார்ட்மென்ட் மற்றும் ஒரு பெரிய வீடு இருப்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



 



 



 



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



 



 



 



பேஸ்புக் பக்கத்தில் தொடர



 



 



 



ட்விட்டர் பக்கத்தில் தொடர



 



 



 



யூடியூபில் வீடியோக்களை காண