கோவை பள்ளி மாணவி தற்கொலை தொடர்பாக மாநில குழந்தை உரிமைகள் நல பாதுகாப்பு ஆணையம் நடத்திய விசாரணையின் அறிக்கை தமிழக அரசிடம் சமர்பிக்கப்படும் என அவ்வாணையத்தின் தலைவர் சரஸ்வதி ரெங்கசாமி தெரிவித்துள்ளார்.


பாலியல் துன்புறுத்தல் காரணமாக கோவையில் தற்கொலை செய்து கொண்ட 17 வயது தனியார் பள்ளி மாணவியின் மரணம் குறித்து தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் நல பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரெங்கசாமி தலைமையில், உறுப்பினர்கள் முனைவர் ராமராஜ், முனைவர் மல்லிகை, முனைவர் சரண்யா ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய நால்வர் கொண்ட அமர்வு இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் விசாரணை மேற்கொண்டது. இதில் கலந்து கொண்டு தகவல்களை அளிக்குமாறு பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து, மாணவியின் பெற்றோர், சக மாணவிகள், மாணவி பயின்ற தனியார் பள்ளியின் ஆசிரியர் பெற்றோர் கழகத்தினர், பள்ளி நிர்வாகிகள், காவல் துறையினர் உட்பட பலரும் நேரில் ஆஜராகியிருந்தனர். அவர்களின் 13 பேரிடம் ஆணைய அமர்வு சுமார் 4 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி, மாணவி மரணம் குறித்து 13 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், விசாரணை அறிக்கை தமிழக அரசிடம் சமர்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார். 




கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வந்தார். இவர் 11 ம் வகுப்பு வரை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் மேல் நிலைப் பள்ளியில் படித்து வந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வேறொரு பள்ளிக்கு மாறினார். இந்நிலையில் கடந்த வாரம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள் பக்கமாக தாழிட்டக் கொண்டு, மின் விசிறியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி தற்கொலைக்கு பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் அளித்த பாலியல் தொல்லையே காரணம் என உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இதனிடையே ‘யாரையும் சும்மா விடக்கூடாது’ என 3 பேர்களை குறிப்பிட்டு மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.




கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் பாலியல் தொல்லை குறித்து மாணவி புகார் அளித்தும் பள்ளி முதல்வர் மீரா நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மீரா ஜாக்சனை தனிப்படை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாணவி தற்கொலை தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.