காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் தொடர்ந்து ஜாமீன் மனு நிராகரிக்கப்படுவதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு செய்ய உள்ளதால் டிடிஎஃப் வாசனின் வழக்கறிஞர்கள் நடவடிக்கை.


 


டிடிஎஃப் வாசன்  (TTF VASAN )
 


இருசக்கர வாகனத்தில் தொலைதூரப் பயணம் மேற்கொள்வது, உயர்ரக பைக்குகளில் சாகசங்கள் மேற்கொள்வது உள்ளிட்ட வீடியோக்களை யூடியூபில் பதிவு செய்து வருவது டிடிஎஃப் வாசனின் வாடிக்கையாக உள்ளது. இந்தநிலையில், டிடிஎஃப் வாசன் கடந்த 17ஆம் தேதி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியில் உயர்ரக பைக்கில் சென்று சாகசம் செய்ய முயன்று விபத்து ஏற்பட்டு காயமடைந்தார். கை முறிவு காயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு சென்ற நிலையில் பாலுசெட்டி சத்திரம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் டிடிஎஃப் வாசன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.


தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாசன் திருவள்ளூர் பூங்கா நகர் பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டில் தலைமறைவாக இருந்து வந்தார். இதனை அடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை விடியற்காலை டிடிஎஃப் வாசன் காஞ்சிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட வாசன் காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1இல் ஆஜர் செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். புழல் சிறைக்கு சென்ற வாசன் உடல்நிலை சரியில்லாததால், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


புழல் சிறையில் 


பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் கடந்த 19ஆம் தேதி காஞ்சிபுரம் பாலு செட்டி சத்திரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு அக்டோபர் 3 ம் தேதியான இன்று வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் டிடிஎஃப் வாசன் கையில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.




ஜாமீன் கேட்டு


பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசகனுக்கு நீதிமன்ற காவல் இன்று முடிவடையும் நிலையில் ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் எண் இரண்டில் மூன்று முறை ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு, நிராகரிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நான்காவது முறையாக பிரபல யூடியூபர் TTF வாசனுக்கு ஜாமீன் கேட்டு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசனுடைய வழக்கறிஞர்கள் மனு செய்திருந்த நிலையில் திடீரென ஜாமின் மனுவானது  திரும்ப பெறப்பட்டது.




காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தொடர்ந்து நிராகரிக்கப்படுவதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு  மனு செய்ய டிடிஎப் வாசன் தரப்பினர் முடிவு செய்துள்ள நிலையில், காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை வழக்கறிஞர்கள் வாபஸ் பெற்று உள்ளனர்.


மேலும் 15 நாட்களுக்கு


இந்நிலையில் டிடிஎஃப் வாசன் உடைய நீதிமன்ற காவல் இன்றுடன் முடியும் நிலையில் காஞ்சிபுரம் நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் டிடிஎப் வாசனை போலீசார் ஆஜர்படுத்த வேண்டிய நிலையில், வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக டிடிஎப் வாசனை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்ப்படுத்தி காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1ல் நீதிபதி இனியா கருணாகரன் மேலும் 15 நாட்களுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்து அக்டோபர் 16 வரை புழல் சிறையில் அடைக்க நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார்.