தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆன்லைன் ரம்மி தடை மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கும் ஒப்புதல் பெறுவதற்காக அனுப்பபட்டுள்ளது.


இளைஞர் தற்கொலை:


ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையான பலரும் தமிழ்நாட்டில் பணத்தை இழந்து தவித்து வருகின்றனர். மேலும், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த பலரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை ஆன்லைன் ரம்மியால் மட்டும் 40க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், திருச்சியில் மற்றொரு துயரம் நேர்ந்துள்ளது.


திருச்சி மணப்பாறை அருகே அஞ்சல்காரன்பட்டியைச் சேர்ந்தவர் வில்சன். அவருக்கு வயது 28. ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையான சுமார் 4 லட்சம் ரூபாயை இழந்துள்ளார். இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான வில்சன் இன்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


ஏற்கனவே கடந்த சனிக்கிழமை திருவெறும்பூர் அருகே மருத்துவமனை ஊழியர் ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் திருச்சியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் அடுத்தடுத்து 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


அரங்கேறும் ஆன்லைன் ரம்மி அவலம்:


தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பலரும் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிது. இது தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர்.


தமிழ்நாடு அரசும் இதற்கான சட்டமசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளனர். இதுவரை இந்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத காரணத்தால், தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்ந்து பலரால் விளையாடப்பட்டு வருகிறது. இந்த விளையாட்டை பொழுதுபோக்காக ஆடத் தொடங்கும் இளைஞர்கள், மாணவர்கள் உள்பட பலரும் நாளடைவில் அடிமையாகி விடுகின்றனர். இதனால், சொந்த பணம் மட்டுமின்றி கடன் வாங்கியும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளையாடி வருகின்றனர்.


இதில் ஏற்படும் லட்சக்கணக்கான நஷ்டத்தால் கடுமையான நெருக்கடிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகும் சிலர் தற்கொலை செய்து கொள்ளும் அவலம் அரங்கேறி வருகிறது. அதுவும் திருச்சி மாவட்டத்தில் ஓரிரு நாட்கள் இடைவெளியிலே ஆன்லைன் ரம்மி கொடுமையால் இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தற்கொலை தீர்வல்ல:


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில்தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)