தமிழ்நாடு சட்டமன்றம் இரண்டு நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் கூடுகிறது. அதேபோல், சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா மோகன் தனது முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். 


தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வாரத்தில் அதாவது, மார்ச் மாதம் 20ஆம் தேதி தொடங்கியது. 20ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகின. அதில் மிகவும் குறிப்பாக தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது மிகவும் கவனம் பெறும் அறிவிப்பாக இருந்தது.


இந்நிலையில் இன்று, தமிழ்நாடு சட்டப்பேரவை சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் கூடுகிறது. இதில் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெறவுள்ளன. இதற்கிடையில், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி அவதூறு வழக்கு ஒன்றில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதனால், அவருடை மக்களவை உறுப்பினர் பொறுப்பு மக்களவை செயலகத்தால் பறிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்புச் சட்டை அணிந்து பேரவை நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர். 


காலை 10 மணிக்கு கூட்டத்தொடர் தொடங்கியதும் முதலில் கேள்வி நேரம் நடைபெறும். இட்ஜ்ஹில் சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி கேட்பதும், அதற்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பர்.  கேள்வி நேரம் முடிந்ததும் 2023-2024-ம் நிதிஆண்டுக்கான பட்ஜெட் மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான 3-வது நாள் விவாதம் நடைபெறும். இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 8 பேர் பேச உள்ளனர். 



தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்புச் சட்டை அணிந்து பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள திட்டமிட்ட நிலையில், அவர்கள் கையில் பதாகைகளை ஏந்தி வந்தனர். பின்னர் அவர்களை அழைத்து பேசிய சபாநாயகர் அப்பாவு மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதாகைகளை வெளியே வைத்துவிட்டு வந்து, சட்டமன்ற செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், கேள்வி நேரம் முடிந்த பின்னர் சபாநாயகர் ராகுல் காந்தி விவகாரம் தொடர்பாக  பேச அனுமதி அளிப்பதாக கூறியதாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னர் காங்கிரஸ் உறுப்பினர்கள் தாங்கள் கொண்டு வந்த பதாகைகளை சட்டமன்றத்திற்கு வெளியே வைத்துவிட்டுச் சென்றனர்.  சட்டமன்றம் கூடுவதற்கு முன்னர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.  


மேயர் ப்ரியாவின் இரண்டாவது பட்ஜெட் 


இதனிடையே தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகராட்சியின் மேயர் ப்ரியா, 2023 - 2024ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை இன்று மாநகராட்சியில் தாக்கல் செய்யவுள்ளார். இது அவர் மேயராக பொறுப்பு ஏற்றப்பின் தாக்கல் செய்யும் இரண்டாவது நிதிநிலை அறிக்கையாகும்.