திருச்சி, முசிறியில் பள்ளி மாணவிக்கு குளிர்பானத்தில் மதுபானம் கலந்து கொடுத்து ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்து, சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட கொடூர நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
மது கொடுத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை
திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள அந்தரப்பட்டியைச் சேர்ந்த ரங்கநாதன் (வயது 21) என்னும் நபர், 16 வயது பள்ளி சிறுமியுடன் பழகி வந்துள்ளார். அவரைக் காதலிப்பது போல் நடித்து கடந்த ஏப்ரல் மாதம் அவரை அருகில் இருக்கும் காவிரி கரையோரத்தில் உள்ள தைலமர காட்டுக்கு தனியாக அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு அப்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து அவரை மயக்க நிலையில் ஆழ்த்தி, சிறுகாம்பூரைச் சேர்ந்த தனது நண்பர்கள் மணிகண்டன் (27) கணேஷ் (24) உள்பட ஐந்து பேருக்கு போன் செய்து அங்கு அனைவரையும் வரவழைத்துள்ளார். அனைவரும் இணைந்து அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததோடு அதனை தங்கள் செல்ஃபோனில் வீடியோ பதிவும் செய்துள்ளனர்.
சிறுமிக்கு குழந்தை திருமணம்
இதையடுத்து அந்தச் சிறுமியை அங்கிருந்து விடுவித்த அவர்கள், இதுபற்றி வெளியில் சொன்னால் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதோடு, தொடர்ந்து சிறுமியை அழைத்துச்சென்று மேலும் மூன்று முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்நிலையில் சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்ததை அடுத்து, கடந்த ஜூன் மாதம் அவரது படிப்பை நிறுத்தியதுடன் மாணவியின் படிப்பை நிறுத்தி கடந்த மே மாதம், திருச்சியைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
மீட்கப்பட்ட சிறுமி
இதைத்தொடர்ந்து குழந்தை திருமணம் குறித்து தகவல் அறிந்த சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலர்கள், ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், காவல்துறையினர் சிறுமியை மீட்டு திருச்சியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். தற்போது சிறுமி திருச்சியில் உள்ள காப்பகத்தில் தங்கி படித்து வரும் நிலையில், சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது
.இந்த வீடியோவை பார்த்து அதிர்ந்த சிறுமியின் பெற்றோர் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
2 பேர் தலைமறைவு
அதில், அவரை ஏற்கெனவே பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, அவர்களுள் ஒருவர் வீடியோவை வாட்ஸ் அப்பில் பகிர்ந்தது தெரிய வந்தது. தொடர்ந்து இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. இதையடுத்து காப்பகத்தில் இருந்த சிறுமியை மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரங்கநாதன் (21), மணி (24), தர்மன் (25) ஆகிய நபர்களை நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இரண்டு பேரை தொடர்ந்து காவல் துறையினர் தேடி வருகின்றனர்.