தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தமன் இன்று தனது 39 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 


2003 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷங்கர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடித்த பாய்ஸ் படம் வெளியாகிறது. சித்தார்த், பரத், நகுல், மணிகண்டன், ஜெனிலியா ஆகியோரோடு முரட்டு உருவத்தில் குழந்தை தனமான முகத்தோடு தமிழக மக்களுக்கு அறிமுகமானார் தமன். கன்டாசாலா சாய் ஸ்ரீனிவாஸ் தமன் என்பதே சுருங்கி எஸ்.எஸ்.தமனாக ரசிகர்களிடத்தில் கொண்டு சேர்த்தது. அடிப்படையில் தொழில்முறை டிரம்மர் மற்றும் பின்னணிப் பாடகரான இவர் பாய்ஸ் படத்தில் அதுசம்பந்தப்பட்ட காட்சியிலும் நடித்திருப்பார். அந்த படத்தில் பாலியல் ஆசையால் அவஸ்தைப்படும் இளைஞராக வீட்டில் அதுதொடர்பான புத்தகங்களை படித்து மாட்டிக்கொள்ளும் கேரக்டரில் தமன் அனைவரையும் சிரிக்க வைத்திருப்பார். அவரது சினிமா வாழ்க்கை பற்றிய இக்கட்டுரையில் காணலாம். 






இசை குடும்பம் 


ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள பொட்டேபாலத்தை சேர்ந்த இசைக்கலைஞர்களின் குடும்பத்தைச் சேர்ந்த தமன் சென்னையில் தான் 1983 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி பிறந்தார். தமனின் தாத்தா பிரபல தயாரிப்பாளர்  கண்டசாலா பலராமய்யா ஆவார். அதேபோல் அவரது தந்தை கன்டாசல சிவ குமார் பிரபல இசையமைப்பாளர் கே. சக்கரவர்த்தியிடம் 700 படங்களுக்கும் மேல் டிரம்மராக பணியாற்றியுள்ளார். மேலும் தமனின் அம்மா, சகோதரி, அத்தை ஆகியோரும் பிண்ணனி பாடகர்கள். 






இசைப்பயணம் 


13 வயதில் தந்தையை இழந்த தமன் குடும்பத்தில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ராஜ்-கோடி இசைக்குழுவில் சேர்ந்து அறுபது படங்களில் பணியாற்றினார். பின்னர் தெலுங்கின் மூத்த இசையமைப்பாளர்  எம்.எம்.கீரவாணியிடம் மூன்று வருடங்கள் முப்பது படங்களில் பணியாற்றினார். இதனையடுத்து இசையமைப்பாளர் மணிஷர்மாவை தனது குருவாக ஏற்றுக்கொண்டு 2009 ஆம் ஆண்டு தெலுங்கில் மல்லி மல்லி என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். 


அதே ஆண்டில் தமிழில் சிந்தனை செய் என்ற படம் மூலம் தமிழிலும் எண்ட்ரீ கொடுத்தார். அந்த படத்தில் உச்சி மீது, நான் காக்கிநாடா ஆகிய இரு பாடல்கள் ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் இன்றும் உள்ளது. தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு வெளியான ஈரம், மாஸ்கோவின் காவிரி ஆகிய படங்கள் தமனின் இசையை பற்றி ரசிகர்களிடத்தில் பேச வைத்தது. குறிப்பாக ஈரம் படத்துக்கு பின்னணி இசையில் மிரட்டியிருந்தார். 






அதன்பிறகு தமிழ், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் இசையமைத்து வந்தார். தமிழில் அய்யனார், ஒஸ்தி, மம்பட்டியான், காஞ்சனா 2, வந்தான் வென்றான், காதலில் சொதப்புவது எப்படி, தடையறத்தாக்க, கண்ணா லட்டு தின்ன ஆசையா, சேட்டை, ஆல் இன் ஆல் அழகுராஜா, பட்டத்து யானை, வல்லினம், வாலு, மீகாமன், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மகாமுனி, ஈஸ்வரன் என பல படங்களுக்கு தமன் இசையமைத்துள்ளார். இதில் பல படங்களுக்கு தமன் தான் இசையமைத்தது என்பது ரசிகர்களால் நம்ப முடியாத அளவுக்கு அவரது இசை துள்ளலாக இருக்கும். 


தெலுங்கின் கில்லி 


கிக்,பாடிகார்ட், நாயக், ராமய்யா வஸ்தாவய்யா, டைகர், பிசினஸ்மேன், பீம்லா நாயக், அல வைகுண்டபுரம், ராதே ஷ்யாம் உள்ளிட்ட பல படங்களின் பாடல்கள் தமனின் இசையால் சூப்பர் ஹிட்டடித்தன. தனது படங்களில் பாடுவதையும் தமன் வழக்கமாக கொண்டுள்ளார். சில படங்களின் பாடல்களில் தோன்றி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளிப்பார். 


ஷங்கர் - விஜய் படங்களில் தமன்


தமனுக்கு இந்தாண்டு மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது என சொல்லலாம். காரணம் பாய்ஸ் படத்தில் எந்த இயக்குநரால் நடிகராக அறிமுகமானாரோ அதே ஷங்கர் தெலுங்கில் இயக்குநராக அறிமுகமாகும் படத்துக்கு இசை தமன் தான். அதேபோல தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்துக்கும் இவர் தான் இசையமைக்கிறார். சமீபத்தில் அப்படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே பாடல் ஹிட்டடித்த நிலையில் அதன் லிரிக்கல் வீடியோவில் தமன் தோன்றியிருந்தார். இப்படி துள்ளலான இசை மூலம் ரசிகர்களை கிறங்கடிக்கும் தமனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!