மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஜார்கிராமில் உள்ள ஒரு சாலையோர தேநீர் கடையில் தனது வாகனத்தை நிறுத்தி உள்ளூர் மக்களுக்கு போண்டா சுட்டு வழங்கிய வீடியோ கவனம் ஈர்த்துள்ளது.
மேற்கு வங்க பழங்குடியினர் நிறைந்த ஜார்கிராம் மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டா பிறந்தநாளை முன்னிட்டு முன்னதாக நடைபெற்ற பாரம்பரிய நிகழ்வில் மம்தா கலந்து கொண்டார். அப்போது பேசிய மம்தா மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்தார்.
“100 நாள் வேலைத் திட்டத்தை செயல்படுத்த நிதி அவசியம். இது தொடர்பாக ஓராண்டுக்கு முன்னரே நான் பிரதமர் மோடியை நேரில் சந்தித்துப் பேசினேன். ஆனால், நான் அவர் காலில் விழுந்து கெஞ்ச வேண்டும் என்று நினைக்கிறாரா? இந்தியா ஜனநாயக நாடுதானா?
நாம் எல்லோரும் ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமா? இந்தியா இல்லாவிட்டால் ஒரே கட்சி ஆட்சி நடக்கும் நாடாகிவிட்டதா? ஜிஎஸ்டி வரி வசூலில் எங்கள் பங்கை எங்களுக்குத் தாருங்கள். இது எங்கள் பணம். இல்லாவிட்டால் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையையே ரத்து செய்யுங்கள். நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு எங்களுக்கு சேர வேண்டிய பங்கை கொடுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் எல்லோரும் பதவி விலகுங்கள்.
மேற்குவங்கத்துக்கு நியாயமாக சேர வேண்டிய நிதியை நிறுத்துவதாக மிரட்டுகிறார்கள். நாங்களும் அப்படியென்றால் ஜிஎஸ்டியை நிறுத்துவோம். நீங்கள் எங்களிடம் வரியை வசூல் செய்துவிட்டு எங்களுக்கான நியாயமான பங்குகளை நிறுத்திவைக்க முடியாது” என்றார்.
பாஜகவின் சுவேந்து அதிகாரி நேற்று மாநிலத்தில் பல்வேறு திட்டங்களிலும் ஊழல் நடைபெறுவதால், மத்திய அரசு மாநிலத்திற்கான நிதியை நிறுத்தும் என்று எச்சரித்திருந்தார். இதற்கு எதிர்வினையாற்றி மம்தா ஆவேசமாகப் பேசினார்.
தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் உரையாடிய மம்தா பானர்ஜி, மத்திய அரசு நிதி அளிக்காததால், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு அளிக்கும் 'ஜல் ஜீவன்' திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை என்று கூறினார்.
தொடர்ந்து அப்பகுதியில் இருந்த சாலையோரக் கடை ஒன்றில் மம்தா போண்டா சுட்டு மக்களுக்கு வழங்கினார். முன்னதாக இதே போல் டார்ஜிலிங்கில் மக்களுக்கு பானி பூரி வழங்கிய வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.