திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை கடந்த சில மாதங்களாக ஒரு சிலர் தங்களது சுய விளம்பரத்திற்காகவும், பிரபலமாக வேண்டும் என்ற எண்ணத்தில் சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும் அளவிற்கு,  வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து புகார்கள் வரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் சமூக வலைதளங்களில் மக்களை அச்சுறுத்தும் விதமாகவும், வன்முறையை தூண்டும் விதமாகவும் தவறான தகவல்கள், வீடியோக்கள் பகிர்ந்தாலோ சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட காவல்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது




திருச்சி  மாவட்ட காவல் துறையின் சமூக வலைதள கண்காணிப்பு குழு, கண்காணித்து போது சோமரசம்பேட்டை, எட்டரை கிராமம், மேலத்தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் முகேஷ் ராஜ் (21) என்பவர் அவரது முகின் முகேஷ் (mugin_mugesh) என்ற ID கொண்ட இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் கத்தி, வாள் போன்ற அபாயகரமான ஆயுதங்களை கையில் வைத்துள்ளவாறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமான வசனங்களுடன் சமூக வலைதளத்தில் வெளிட்டு வந்துள்ளது தெரிய வந்தது. இந்நிலையில்,  எட்டரை கடைவீதிக்கு காய் கறி வாங்க வந்த பெண் ஒருவர் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் Helpline எண்ணிற்கு தொடர்பு கொண்டு எட்டரை சிவன் கோவில் பகுதியில் அடையாளம் தெரிந்த நபர் ஒருவர் அருவாளுடன் நின்று கொண்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இருப்பதாக தகவல் கொடுத்ததின் பேரில்,  திருச்சி மாவட்ட தனிப்படை போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்ற போது அங்கு அருவாளுடன் சுற்றி திரிந்த மேற்படி முகேஷ் ராஜ்-யை கைது செய்து சோமரசம்பேட்டை காவல் நிலைய குற்ற எண். 351/23, ச.பி. 294(b) 506(il) இதச & 27(1) Arms Act ன்படி வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.




மேலும் இது போன்று அபாயகரமான ஆயுதங்களுடன் கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடும் நபர்கள், அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை கொண்டு பிறந்த நாள் மற்றும் பிற விழா காலங்களில் கேக்குள் வெட்டும் நபர்கள், வில்லன்கள் போன்ற தோனியில் பின் இசைகள் கொண்ட பாடல் மற்றும் வீடியோக்களை பதிவிடும் நபர்களின் விபரத்தினை உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவி எண் Helpline Number 94874 64651 தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், அபாயகரமான ஆயுதங்களுடன் கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடப்படும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.