திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கபிரியேல்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன் சந்தானம். இவரது மகன்கள் லூர்து ஜெயக்குமார் (வயது 29), தாமஸ் எடிசன் (24). இருவரும் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். அதேபோல் லால்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளம் பெண் திருச்சியில் உள்ள தனியார் ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு லூர்துெஜயக்குமார், தாமஸ் எடிசன் ஆகியோர் வேலை முடிந்து திருச்சி சத்திரம் பஸ்நிலையத்தில் இருந்து லால்குடி செல்லும் தனியார் பஸ்சில் ஏறி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். அதே பஸ்சில் இளம்பெண்ணும் பயணம் செய்தார். இந்த நிலையில் பஸ்சில் வைத்து, அந்த பெண்ணை தாமஸ் எடிசன் செல்போனில் படம் பிடித்து கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண் அவரது அண்ணன் குப்புசாமிக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து உள்ளார். இதையடுத்து குப்புசாமி அவரது நண்பர்களை அழைத்துக் கொண்டு கபிரியேல்புரம் பஸ் நிறுத்தத்திற்கு வந்தார். அங்கு பஸ்சில் இருந்து இறங்கிய தாமஸ் எடிசனை அவர்கள் அடித்து உதைத்துள்ளனர். பின்னர் அவரை லால்குடி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்வதாக கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றி மாந்துரை அக்ரஹாரம் சிவன் கோவில் அருகே வைத்து கடுமையாக தாக்கி உள்ளனர்.




மேலும் இதைக்கண்ட தாமஸ் எடிசனின் அண்ணன் லூர்து ஜெயக்குமார் வீட்டுக்கு சென்று தனது தந்தை ஸ்டீபன் சந்தானத்தை அழைத்து வந்தார். சம்பவ இடத்துக்கு வந்த ஸ்டீபன் சந்தானம் மகன் தாக்கப்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்து தட்டி கேட்டுள்ளார். ஆனால் குப்புசாமியும், அவரது நண்பர்களும் ஆத்திரம் அடைந்து லூர்து ஜெயக்குமாரையும், ஸ்டீபன் சந்தானத்தையும் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் மயங்கி விழுந்த லூர்து ஜெயக்குமாரை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். தந்தை கண்முன்னே மகன் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பலத்த காயம் அடைந்த தாமஸ் எடிசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து குப்புசாமியை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது நண்பர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண