Yemen : ஏமன் நாட்டில் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி 79 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஏமன்
அரேபிய தீபகற்பத்தில் ஏழை நாடாக இருப்பது ஏமன். இங்கு நடந்த உள்நாட்டு போரால் பொருளாதாரம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் மக்கள் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. 21.7 மில்லியனுக்கு அதிகமான மக்கள் தொகை இருக்கும் இந்த நாட்டில் வறுமை வாட்டி வதைத்து வருகிறது. இரண்டு பங்கு மக்கள் இந்த ஆண்டில் மனிதாபிமான உதவியை தேடுகின்றனர். சுமார் 1.7 கோடி மக்கள் வறுமையின் பிடியில் வாழ்கின்றனர். இப்படி வறுமையால் இருக்கும் இந்த நாட்டில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
79 பேர் உயிரிழப்பு
அந்தவகையில், ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஏமனில் அறக்கட்டளை ஒன்று ஏழைகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியது. ஏமனின் தலைநகர் பாப் அல்யெமன் என்ற மாவட்டத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நிதி உதவியை பெற மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், இந்த கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 79 பேர் உயிரிழந்ததாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
காயமடைந்தவர்களை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வணிகர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், இது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் பெரும்பாலான வீடியோக்களில் ஒரு பெரிய வளாகத்தில் மக்கள் உடல்கள் கிடைப்பதையும், அவர்களை சுற்றி கூச்சலிடும் காட்சிகள் இடம்பெற்றன.
முன்னதாக, ஏமன் நாட்டில் சர்வதே அளவில் அங்கீகாரம் பெற்றிருந்த அரசை நீக்கி 2014ஆம் ஆண்டு ஈரான் ஆதரவுடன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனால் பழைய அரசை திரும்ப பெற முயற்சியில் சவுதி ஆதரவு கூட்டணி முயற்சித்து வருகிறது. இந்த இருநாடுகளில் போரால் அந்நாட்டின் வீரர்கள் மற்றும் மக்கள் என சுமார் 1.5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த போரால் அரசு ஊழியர்களுக்கு பல ஆண்டுகளாக ஊதியம் கிடைக்காத நிலை உள்ளது. இந்நிலையில், இலவச உணவுக்காக குவிந்த கூட்டத்தில் சுமார் 79 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.