திருச்சி தென்னூர் குத்பிஷாநகரை சேர்ந்தவர் ஜமீல்அகமது (வயது 43). இவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் இருந்து செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், காலிமனைகள் விற்பனைக்கு உள்ளதாகவும், இது பற்றி அறிய முதலியார் சத்திரத்தில் உள்ள அலுவலகத்துக்கு வரும்படியும் அழைத்துள்ளனர். அதன்படி ஜமீல்அகமது அந்த நிறுவனத்துக்கு சென்றுள்ளார். அங்கிருந்த ரஞ்சித்குமார் தன்னை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் என அறிமுகப்படுத்தி கொண்டார். மேலும் சிலர், தங்களிடம் முதலீடு திட்டம் உள்ளதாகவும், அதில் முதலீடு செய்தால் இரட்டிப்பு தொகையுடன், இலவச மனையும் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பிய அவர் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி முதல் 2022-ம் ஆண்டு மே 15-ந் தேதி வரை ரஞ்சித்குமாருடன் செய்து கொண்ட பல்வேறு ஒப்பந்தங்களில் ரூ.51 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். பின்னர் அந்த தொகையில் ரூ.21 லட்சத்து 60 ஆயிரத்தை பல்வேறு தவணைகளில் திருப்பி தந்துள்ளனர். ஆனால் மீதித்தொகை ரூ.29 லட்சத்து 40 ஆயிரம் மற்றும் லாபத்தொகையை திருப்பி தராமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கேட்டபோது, மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து ஜமீல்அகமது கொடுத்த புகாரின்பேரில் கண்டோன்மெண்ட் போலீசார், அவர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு மாநகர குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த ரஞ்சித்குமாரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.




இதேபோல் திருச்சி தென்னூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் அசோக்(43). இவர் திருச்சி நாச்சிக்குறிச்சி 8-வது குறுக்குத்தெரு வாசன் வேலியை சேர்ந்த டாக்டர். பிரகாஷ், அழகேசன், டாக்டர் புரோஜா ஆகியோர் நடத்தி வந்த பங்குச்சந்தை நிறுவனத்தில் முதலீடு செய்தார். அப்போது ரூ.95 லட்சம் முதலீடு செய்ததாகவும், அந்த தொகையை இரட்டிப்பாக ரூ.1 கோடியே 90 லட்சம் திருப்பி தருவதாக கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் சொன்னபடி அந்த தொகைைய திருப்பி தரவில்லை. இதனால் அசோக் தனக்கு தரவேண்டிய தொகையை திருப்பி தருமாறு பிரகாஷிடம் பலமுறை கேட்டுள்ளார். அதற்கு பிரகாஷ், அசோக்கிற்கு சேரவேண்டிய முழு தொகையையும் திருப்பி கொடுத்து விடுவதாகவும் தவறும்பட்சத்தில் தனது சொத்தை அசோக்கிற்கு கிரயம் செய்து தருவதாக உறுதிமொழி ஆவணம் ஏற்படுத்தி கொடுத்துள்ளார். ஆனால் தற்போது வரை பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பணத்தை மீட்டு தருமாறு திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் புகார் மனு அளித்தார். அதன்படி மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர் பிரகாஷை கைது செய்தார்.