கோவையில் குழந்தைக்கு பால் கொடுப்பதை பார்த்தாக கூறி 58 வயதான நபரை அடித்து கொலை செய்த இந்து மக்கள் பிரமுகர்கள் இருவர் உட்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை சாய்பாபா காலனி பெரிய சுப்பன்ன கவுண்டர் வீதியை சேர்ந்தவர் முஸ்தாக் அஹமத். 58 வயதான இவர், மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் முஸ்தாக் அகமதிடம் சிலர் தகராறு செய்வதாக, கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன் பேரில் சாய்பாபா காலனி காவல் நிலைய காவலர்கள் அப்பகுதிக்கு சென்று பார்த்த போது, அப்பகுதியை சேர்ந்த ராகுல் (24) மற்றும் அவரது அண்ணன் மணிகண்ட மூர்த்தி ஆகியோர் முஸ்தாக் அகமது உடன் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கிய விபரம் தெரியவந்தது.
காவல் துறையினர் விசாரணை நடத்திய போது, முஸ்தாக் அகமது ராகுலின் மனைவி அவரது கைக்குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுவதை பார்த்ததாக எழுந்த சந்தேகத்தின் பேரில் கடந்த 8 ம் தேதியன்று இரவு ராகுல் அவரது வீட்டிற்கு சென்று தகராறு செய்து அவரை அடித்ததாகவும், அதே பிரச்சனைக்காக ராகுல் இந்து மக்கள் கட்சியில் உள்ள அவரது அண்ணன் மணிகண்ட மூர்த்தி (27) மற்றும் அவரது நண்பரான மனோஜ் (26) ஆகியோருக்கு போன் மூலம் தகவல் கொடுத்து வரவழைத்து தகராறில் ஈடுபட்டு அடித்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் ராகுல் தரப்பினரை கடுமையாக எச்சரித்து விட்டு, மறுநாள் காலை விசாரணைக்கு இருதரப்பினரும் சாய்பாபா காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகுமாறும், அதுவரையில் யாரும் எவ்வித பிரச்சனையிலும் ஈடுபடக்கூடாது என்றும் எச்சரித்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் தலையில் காயத்துடன் முஸ்தாக் அகமது பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் சாய்பாபா காலனி காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது காவல் துறையினர் சென்ற பிறகு, ராகுல், மணிகண்ட மூர்த்தி மற்றும் மனோஜ் ஆகியோர் மீண்டும் முஸ்தாக் அகமதுடன் தகராறில் ஈடுபட்டு அவரை கடுமையாக தாக்கியுள்ளார்கள் என்பதும், அவர்களால் தாக்கப்பட்ட முஸ்தாக் அகமது அவர் வீட்டிற்கு செல்லும் வழியில் அவரது வீட்டின் முன்பாக உள்ள சாக்கடை கால்வாயில் விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.