Crime: கணவரை கொலை செய்து உடலை எரித்து விட்டதாக மனைவி வாக்குமூலம் அளித்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மனைவி புகார்


கேரளமாநிலத்தைச்  சேர்ந்த தம்பதி அஃப்சானா மற்றும் நௌஷாத். இவர்கள் தங்கள் இரண்டு குழந்தைகளுடன் அடூர் என்ற பகுதியில் வசித்து வந்துள்ளனர். நௌஷாத் மீன் விற்பனை மற்றும் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார்.  இவர்கள் அடூர்  பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நௌஷாத் திடீரென மாயமாகி உள்ளார். உடனே நௌஷாத் குடும்பத்தினர் அடூர் காவல்நிலையத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதனை தொடர்ந்து,  நௌஷாத் குடும்பத்தினரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நௌஷாத்தின் மனைவி அஃப்சானா முன்னுக்கு பின் முரணமாக பதில்களை அளித்தார்.


பகீர் வாக்குமூலம்: 


இதனால், போலீசார் அஃப்சானாவிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது, கணவனை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்ததாகவும், அவரது உடலை வீட்டிற்குள் புதைத்தாகவும் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.  மேலும், அவரது உடலை எரித்து சாம்பலை ஆற்றில் கலக்கி விட்டதாகவும்,  வீட்டருகே உள்ள கல்லறை தோட்டத்தில் புதைத்து விட்டதாகவும் மாற்றி மாற்றி கூறியிருந்தார். இதனை அடுத்து, கணவரின் உடலை தேடுவதற்காக போலீசார் பல இடங்களில் தோண்டி உள்ளனர். அந்த பெண்ணின் வீடு, வீட்டின் பின்புறம் என்று பல இடங்களில் தேடி உள்ளனர். தனது வீட்டிற்கு உள்ளேயும் புதைக்கப்பட்டதாக அந்த பெண் கூறியதால், போலீசார் அங்கேயும் தோண்டி தேடி உள்ளனர். இப்படியே கடந்த மூன்று நாட்களாக போலீசார் நௌஷாத்தின் உடல் பாகங்களை தேடி வந்துள்ளனர். போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், திடீரென நௌஷாத் உயிருடன் கூடல் நகர் காவல்நிலையத்திற்கு வந்திருந்தார்.


ஷாக் கொடுத்த கணவர்: 


பின்பு, அதிர்ச்சியான போலீசார், நௌஷாத்திடம் விசாரணை நடத்தினர். அதில், மனைவி அஃப்சனாவுக்கு பயந்துதான் ஊரை விட்டு சென்றதாகவும், அவர் தன்னை சித்திரவதை செய்வதாகவும், கொடூரமாக அடிப்பதாகவும், வித்தியாசமாக நடந்து கொள்வதாகவும் அவர் கூறினார். இதற்கெல்லாம் பயந்துதான் நான் ஊரை விட்டு சென்றதாக வாக்குமூலம் அளித்தார். மேலும், இந்த மனநிலையில் இருக்கும் தனது மனைவி, தன்னை கொலை செய்யக் கூட தயங்க மாட்டார் என்று எண்ணிதான் ஊரை விட்டு சென்றதாக  நௌஷாத் கூறினார். 3 நாட்களாக போலீசாரை அலைய விட்ட இந்த சம்பவம்  அம்மாநில முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.