திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தரடாப்பட்டு கிராமத்தில் உள்ள அருந்ததியர் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் வயது (45).  இவர் மும்பையில் பூ வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி விஜயசாந்தி வயது (40). இந்த தம்பதிக்கு 5 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு தம்பதி இருவரும் பிரிந்து தனித்தனியாக வசித்து வந்தனர். ரவீந்திரன் அவ்வப்போது சொந்த ஊர் வந்து தனது வீட்டில் தங்கியிருந்து விட்டு செல்வாராம். இதே போல் கடந்த 2 நாட்களுக்கு முன் சொந்த ஊர்வந்தார். நேற்று முன் தினம் இரவு வீட்டில் உணவு சாப்பிட்டு விட்டு கதவை மூடிவிட்டு தூங்கியுள்ளார்.  அதிகாலை அதே தெருவில் உள்ள பகுதியில் அரை நிர்வாணத்துடன் ரவீந்திரன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தரடாப்பட்டு விஏஓ சாலம்மாளுக்கு தெரிவித்தனர். அவர் கொடுத்த புகாரின்பேரில் செங்கம் துணை காவல் கண்காணிப்பாளர் சின்னராஜ், ஆய்வாளர் சரவணன், செல்வநாயகம் சாத்தனூர் அணை துணை ஆய்வாளர் டேவிட் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.


 




மேலும், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன், நகர காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் மற்றும் குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், மோப்பநாய் மியா வரவழைக்கப்பட்டு அந்தப் பகுதியில் சிறிது நேரம் ஓடி நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. காவல்துறையினர் சந்தேகத்தின் பெயரில் கொலையான ரவீந்திரனின் உடல் அருகே கருங்கல் தலையில் தாக்கிய காயம் இருந்தது. மேலும் அப்பகுதியில் ரத்தக்கறை காணப்பட்டதால். அவரை ஓடஓட விரட்டி வெட்டி, கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்ப காவல்துறையினர் முயன்றனர். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரவீந்திரனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கொலையாளிகளை கண்டுபிடித்து கைது செய்துவிட்டு அதன் பிறகு சடலத்தை எடுக்கவேண்டும் எனக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கொலையாளிகளை கண்டுபிடித்து கைது செய்வதாக காவல்துறையினர் உறுதியளித்தனர்.


 




இதையேற்று சாலை மறியலை கைவிட்டனர். அதன்பின்னர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரவீந்திரன் மும்பையில் இருந்து வரும்போது அவரை யார் யாரெல்லாம் சந்தித்தார்கள் அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சாத்தனூர் அணை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடிவருகின்றனர். இதனிடையே சந்தேகத்தின் பேரில் 3 நபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.