திருவண்ணாமலை (tiruvannamalai news ): திருவண்ணாமலை வேலூர் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள திருச்செந்தூர் முருகன் பெட்ரோல் பங்கில் நேற்று இரவு இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் போடுவதற்காக வந்துள்ளனர். அந்த இளைஞர்கள் பெட்ரோல் போட்டு விட்டு, என்னுடைய இருசக்கர வாகனத்திற்கு போட்ட பெட்ரோலுக்கான பணத்தை பின்னால் வரும் என்னுடைய நண்பர் பணம் கொடுப்பார் என கூறியுள்ளார். அவர் கூறியபடி, மற்றொரு இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் வந்து பெட்ரோல் போட்டுக்கொண்டனர். அப்போது பெட்ரோல் பங்க் ஊழியர் முந்தைய பெட்ரோல் போட்ட பணமும் தற்போது போட்ட பணமும் கேட்டுள்ளார். அதற்கு இளைஞர்கள் நாங்கள் எதற்கு பணம் கொடுக்க வேண்டும், அவர்களுக்கு பணம் நாங்கள் தரமாட்டோம் என கூறி பங்க் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பெட்ரோல் பங்க் மேலாளரை கத்தியால் தாக்கு இளைஞர்கள்
இதனை தொடர்ந்து பங்கின் மேலாளர் ரகுராமன் வெளியில் என்ன சத்தம் வருகிறது என வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது பங்க் ஊழியரும் இளைஞர்களும் வாங்குவதில் ஈடுபட்டு இருந்ததை பார்த்த மேலாளர் ரகுராமன் உடனடியாக அங்கு சென்று இளைஞர்களிடம் விசாரித்துக்கொண்டு இருந்தார். அப்போது நான்கு இளைஞர்களும் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து மேலாளர் ரகுராமனையும் அங்கு இருந்த பங்க் ஊழியர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் மற்றொரு இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பங்க் மேலாளர் மற்றும் ஊழியர்களை வெட்ட முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மேலாளர் ரகுராமன் அங்கு இருந்து தப்பித்து பங்கில் உள்ள அறைக்கு சென்றுள்ளார். ஆனாலும் அந்த இளைஞர் கத்தியை எடுத்து கொண்டு அறையின் உள்ளே வந்து ரகுராமனின் தலையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றனர்.
காவல்துறையினர் விசாரணை
ரத்த வெள்ளத்தில் இருந்த மேலாளர் ரகுராமனை பங்க் ஊழியர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை கிழக்கு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் பங்கில் இருந்த சிசிடிவி கட்சிகளை கைப்பற்றி தப்பியோடிய இளைஞர்களை வலைவீசி காவல்துறையினர் தேடி வருகின்றனர். பெட்ரோல் போட்டுவிட்டு இளைஞர்களிடம் பங்க் மேலாளர் ரகுராமன் பணம் கேட்டதால் அவர்கள் அரிவாளால் மேலாளரை வெட்டிய சம்பவம் திருவண்ணாமலை பொது மக்களிடையே அச்சத்தையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .