திருவண்ணாமலை திருவூடல் வீதியில் திருவண்ணாமலை, செங்கம், கீழ்பெண்ணாத்தூர் மற்றும் தண்டராம்பட்டு ஆகிய 4 தொகுதிகளில் உள்ள யாதவ குலத்திற்கு சொந்தமான யாதவர் திருமண மண்டபம் அமைந்துள்ளது. இந்த திருமண மண்டபத்தில் யாதவர் மட்டுமின்றி மற்ற சமுதாயத்தினரும் தங்கள் இல்ல சுப நிகழ்ச்சிகளை பணம் கட்டி ரசீது பெற்று நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த திருமண மண்டபத்தை அதே சமுதாயத்தை சேர்ந்த ஒரு தரப்பினர் நிர்வகித்து வந்த நிலையில் தொடர்ச்சியாக அவர்களே நிர்வகித்து வருவதாக பலதரப்பட்ட மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். தற்பொழுது அந்த மண்டபத்தில் அறவாழி என்பவரை தலைவராக முறைப்படி தேர்ந்தெடுத்து நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மேல்வணக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் தனது மகனின் திருமணத்திற்காக கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு திருமண மண்டபத்தில் ரூபாய் 30,000 முன்பணமாக செலுத்தி ரசீது பெற்று நாளை காலை திருமணம் செய்ய உள்ளார்.


 




 


இந்த நிலையில் நேற்று (22.05.23) தனது மகனின் திருமணத்திற்கு தேவையான அனைத்து மளிகை பொருட்களை சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கி மண்டபத்தில் உள்ள சமையல் அறையில் வைத்து பூட்டு போட்டு பூட்டி சாவியை முன்னாள் ராணுவ வீரர் எடுத்துச் சென்றுள்ளார். அதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களாகவே மண்டபத்தை நிர்வகித்து வந்தனர். இரு தரப்பினருக்கும் தற்போதைய தலைவர் உள்ளிட்ட தலைவர் தரப்பினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு நகர காவல் நிலையம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டு அதனுடைய வழக்கு நிலுவையில் உள்ளது.மண்டபத்தின் முன்னாள் பொருளாளரும், வழக்கறிஞரும், பாஜக ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில துணைத்தலைவருமான டி.எஸ். சங்கர் தூண்டுதலின் பேரில் அவரது ஆதரவாளர்களான கீழ்நாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், அருண் பாண்டியன், ராஜேஷ் உள்ளிட்ட 7 பேர் நேற்று இரவு அத்துமீறி மண்டபத்திற்குள் நுழைந்து மண்டபத்தில் திருமணத்திற்காக திருமண வீட்டார் வாங்கி வைத்திருந்த மளிகை பொருட்கள் வைக்கப்பட்ட அறையை உடைத்து சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான அனைத்து மளிகை பொருட்களையும் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. திருவண்ணாமலை நகர குற்றப் புலனாய்வு பிரிவில் தற்போதைய யாதவர் திருமண மண்டபத்தின் தலைவர் அரவாழி புகார் மனு அளித்துள்ளார்.


 




 


இதுகுறித்து பேசிய தலைவர் அரவாழி; வழக்கறிஞர் சங்கர் தொடர்ச்சியாக இது போன்ற செயலில் ஈடுபட்டு வருவதாகவும், தங்களை நிர்வாகம் செய்ய விடாமல் அவ்வப்போது இதுபோன்று தகராறு செய்து வருவதாகவும் குற்றம் காட்டும் அவர் தற்பொழுது திருமண வீட்டார் வாங்கி வைத்திருந்த மளிகை பொருட்களை திருடி சென்றதால் திருமண வீட்டார் செய்வதறியாமல் தவித்து வருவதாகவும், உடனடியாக காவல்துறை திருமண வீட்டாருக்கு மளிகை பொருட்களை பெற்று தருமாறும் மேலும் அத்துமீறி உள்ளே நுழைந்து மண்டபத்தில் மளிகை பொருட்களை திருடி சென்ற சங்கர் உள்ளிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். தொடர்ந்து பேசிய மணமகனின் தந்தை; முறைப்படி மண்டபத்திற்கு பணம் கட்டி ரசீது பெற்றுள்ளதாகவும் நேற்று மாலை தான் வைத்து பூட்டிச் சென்ற மளிகை பொருட்களை திருடி சென்று தனக்கும் தனது வீட்டாருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் வேதனையுடன் கூறும் அவர் உடனடியாக மளிகை பொருட்களை கொடுத்து திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.