திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்தவர் சஞ்சீவிரெட்டி. அவருக்கு வயது 68. இவர் அந்த பகுதியில் உள்ள மாருதி தெருவில் வசித்து வந்துள்ளார். அப்பகுதியில் பா.ம.க.வின் முக்கிய பிரமுகராக விளங்கிய அவர், அப்பகுதியில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். சஞ்சீவி ரெட்டிக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி சரஸ்வதி 25 வருடங்களுக்கு முன்பே இறந்த காரணத்தால், அவர் மாலா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவருக்க வயது 60.


இந்த நிலையில், சஞ்சீவிரெட்டி தம்பி பாலு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தனது அண்ணன் சஞ்சீவிரெட்டியும், தனது அண்ணி மாலாவும் கடந்த 28-ந் தேதி முதல் காணவில்லை என்று திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, நேற்று முன்தினம் பூட்டிக்கிடந்த சஞ்சீவிரெட்டியின் வீட்டை போலீசார் உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, வீட்டின் உள்ளே இருந்த நகை, பணம், முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டறிந்தனர்.




இதையடுத்து, சஞ்சீவிரெட்டியையும், அவரது மனைவியையும் நகை மற்றும் பணத்திற்காக யாரேனும் கடத்திச் சென்றனரா என்ற கோணத்தில் போலீசார் தங்களது விசாரணையைத் தொடங்கினர். உடனடியாக, போலீசார் சஞ்சீவிரெட்டியின் மொபைல் எண்ணை ஆய்வு செய்தனர். பின்னர், அவருடன் கடைசி சில நாட்கள் செல்போன் எண்ணில் பேசியவர்ளை கண்காணித்தனர்.


இந்த நிலையில், ஆந்திர மாநிலம் புத்தூரில் இருந்து கார்வேட்டி நகரம் செல்லும் வழியில் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண் மற்றும் பெண் இருவரின் சடலங்கள் கொலை செய்து புதைக்கப்ப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில் அந்த சடலங்கள் சஞ்சீவி ரெட்டி மற்றும் அவரது மனைவி மாலா என்பது உறுதிசெய்யப்பட்டது.


பின்னர், கணவன் மனைவி இருவரது உடலையும் கைப்பற்றிய போலீசார் அவர்களது சடலங்களை பிரேத பரிசோதனைக்காக திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதேசமயம், போலீசார் விசாரணையில் சஞ்சீவிரெட்டி வீட்டில் இருந்த ரூபாய் 5 கோடி மதிப்புள்ள சொத்த ஆவணங்கள், ரூபாய் 50 லட்சம் ரொக்கம், 150 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது.




திருத்தணியில் வசித்த தம்பதியினர் ஆந்திராவில் கடத்தி கொன்று புதைக்கப்பட்டதால், வழக்கமான கொள்ளையர்களின் பாணியாக காவல்துறைக்கு இந்த வழக்கு தெரியவில்லை. இதனால், காவல்துறையினர் சஞ்சீவரெட்டியின் தொழில் ரீதியான தொடர்பில் இருந்தவர்கள் யாரேனும் இதை செய்திருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணையை துரிதப்படுத்தினர்.  இதையடுத்து, சஞ்சீவ ரெட்டியின் தொழிலில் நெருக்கமாக இருந்தவர்கள் மற்றும் அவரது செல்போன் எண் தொலைபேசி விவரங்களை வைத்து விசாரணையை மேற்கொண்டனர்.


அப்போது, சஞ்சீவரெட்டியின் தங்கை மகன் ரஞ்சித்குமாருக்கு வியாபார ரீதியாக சஞ்சீவரெட்டி பல்வேறு உதவிகளை செய்து வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும், சஞ்சீவரெட்டியின் தொலைபேசி எண்ணிற்கு கடைசியாக வந்த அழைப்பும் ரஞ்சித்குமாரின் எண்ணில் இருந்தே வந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர்.


இதனால், போலீசாரின் சந்தேகம் ரஞ்சித்குமார் பக்கம் திரும்பியது. அவரை பிடித்த போலீசாரிடம் அவர் முன்னுக்கு பின் முரணான பதில்களை கூறியுள்ளார். இதனால், போலீசார் தங்கள் பாணியில் ரஞ்சித்குமாரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, ரஞ்சித்குமார் பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.


வியாபாரத்தில் அதிகளவு கடனும், நஷ்டமும் ரஞ்சித்குமாருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கடுமையான பண நெருக்கடிக்கு ரஞ்சித்குமார் ஆளாகியுள்ளார். தன்னுடைய பணநெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக தனது தாய்மாமனான சஞ்சீவரெட்டியிடம் இருந்த லட்சக்கணக்கான பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டார்.




இதனால், கடந்த 29-ந் தேதி தனது தாய்மாமன் சஞ்சீவரெட்டியையும், அத்தை மாலாவையும் கோவிலுக்கு அழைத்துச் செல்வதாக கூறி காரில் அழைத்துச் சென்றுள்ளார். காரில் அவர்களை அழைத்துச் செல்லும் வழியிலே, தனது நண்பர்களான விமல்ராஜ் மற்றும் ராபர்ட் ஆகிய இருவரையும் காரில் ஏற்றிக்கொண்டார்.


கார் வழியில் சென்றுகொண்டிருந்தபோதே, சஞ்சீவரெட்டியையும், மாலாவையும் ரஞ்சித்குமாரும் அவரது நண்பர்களும் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர், அவர்கள் இருவரது உடலையும் ஆந்திர மாநிலம் புத்தூர் அருகே உள்ள ராமச்சந்திராபுரம் அருகே இருந்த காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு ஆழமான குழி தோண்டி அவர்கள் இருவர் உடலையும் புதைத்துள்ளனர். பின்னர் சித்தூர் காட்டுப்பகுதியில் சஞ்சீவரெட்டியின் செல்போனையும் வீசியுள்ளார்.


பின்னர், திருத்தணி திரும்பிய ரஞ்சித்குமார் நேரடியாக தனது தாய்மாமன் வீட்டிற்கு சென்று அங்கு பீரோவில் இருந்த 150 சவரன் நகை, 50 லட்சம் ரொக்கம் மற்றும் 5 கோடி மதிப்பிலான முக்கிய ஆவணங்களை திருடிக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார். ரஞ்சித்குமாரின் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து ரஞ்சித்குமார் மற்றும் அவரது நண்பர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். பணத்திற்காக சொந்த தாய்மாமனையே மருமகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.