திருப்பத்தூரில் இரும்பு கடையில் 300 கிராம் செம்பு கம்பி திருடிய முதியவரை, மனைவி முன் கடைக்காரர் பணம் கேட்டு  அவமானப்படுத்தியதால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பஞ்சணம்பட்டி பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் ஞானமூர்த்தி வயது (45). இவர் அதே பகுதியில் பாத்திரம் மற்றும் இரும்பு கடை நடத்தி வந்தார்.

 

இந்த நிலையில் அந்த கடையில் ராவுத்தம்பட்டி பகுதியை சேர்ந்த குமாரசாமி மகன் அண்ணாமலை (70) என்பவர் பணியாற்றி வந்தார்

 

இந்த நிலையில் சில மாதங்களாக அந்த கடையில் குறைந்த அளவில் செம்புகள் திருடு போய் உள்ளது. அப்போது நேற்று இதேபோல் 300 கிராம் அளவிலான செம்பு கம்பியை அண்ணாமலை திருடி சென்றுள்ளார். இதனை கையும் களவுமாக ஞானமூர்த்தி பிடித்துள்ளார்.

 

அப்போது இதற்கு முன்பு திருடு போன செம்பு கம்பிகளையும், ‘நீ தான் திருடியிருக்க வேண்டும் எனவே அதற்கான தொகையை ரூபாய் 25 ஆயிரம் கொடுக்க வேண்டும்’ என அண்ணாமலையின் மனைவி முன்பு பாத்திர கடை முதலாளி ஞானமூர்த்தி கேட்டுள்ளதாக தெரிகிறது.

 

இதனால் மனமுடைந்த அண்ணாமலை இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதன் காரணமாக அண்ணாமலையின் மகன் பாஸ்கர் இன்று திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் தந்தை இறப்பிற்கு காரணம் பாத்திர கடைக்காரரே என புகார் அளித்துள்ளார். இதன் காரணமாக திருப்பத்தூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 


இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்.