நாட்றம்பள்ளி அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் திருட முயற்சி செய்த நபருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்! மயக்க நிலையில் திருப்பத்தூர் அரசு அனுமதிக்கப்பட்ட நிலையில் திருட முயற்சி செய்தவர் கழிவறை ஜன்னல் மூலமாக தப்பி ஓட்டம்! தட்டி தூக்கிய நாட்றம்பள்ளி போலீசார்!

 

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த அக்ரஹாரம் வேடிவட்டம் பகுதியைச் சேர்ந்த சீனிவாச கவுண்டர் மகன் தேவேந்திரன் (67). இவர் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு பால பாஸ்கர் என்ற மகன் வேலூரில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் தேவேந்திரன் மற்றும் அவருடைய மனைவி ஈஸ்வரி ஆகிய இருவரும் தனது மகனை பார்க்க கடந்த 28ஆம் தேதி வேலூருக்கு சென்றுள்ளனர். 

 

அப்போது இரவு திடீரென தனது மொபைலில் இருந்து வீட்டில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து போது இரண்டு மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே புகுந்து பூட்டை உடைத்துக் கொண்டிருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ந்து போன தேவேந்திரன் உடனடியாக தங்களுடைய உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கையில் வீட்டின் அருகில் சென்ற உறவினர்கள் மற்றும் பொதுமக்கள்  வீட்டில் திருட முயற்சி செய்த இரண்டு பேரையும் பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது அங்கிருந்து ஒருவர்  தப்பி ஓடிய நிலையில் கர்நாடக மாநிலம் மைசூர் அடுத்த ஸ்ரீநகர் பகுதியைச் சேர்ந்த சிவசேனன் என்பவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதன் காரணமாக அந்த நபர் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். 

 

இந்த சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசருக்கு தகவல் தெரிவிக்கையில் விரைவில் வந்த போலீசார் மயக்க நிலையில் இருந்த அந்த நபரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில்  திருப்பத்தூர் அரசு மருத்துவமனை சிகிச்சையில் இருந்த சிவசேனன் என்பவருக்கு நாட்றம்பள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தும்  கழிவறைக்கு சென்று வருவதாக கூறி கழிவறையின் ஜன்னல் வழியாக தப்பித்து ஓடி உள்ளார்.

 

இதன் காரணமாக நாட்றம்பள்ளி போலீசார் தப்பி ஓடிய சிவசேனனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஒரு வார காலமாக தீவிரமாக தேடிவந்த நிலையில் கர்நாடகாவில் முகாமிட்டு சிவசேனனை நாட்றம்பள்ளி போலீசார் கைது செய்தனர். 

இதன் காரணமாக போலீசார் கண்களில் மண்ணைத் தூவி தப்பி ஓடிய நபரை போலீசார் தட்டி தூக்கிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.