நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ளது ஆற்றங்கரை பள்ளிவாசல். மிகவும் புகழ்பெற்ற இந்த ஆற்றங்கரை பள்ளிவாசலுக்கு இஸ்லாமிய மக்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் சென்று நேர்த்திக்கடனை செலுத்தி வருவது வழக்கம். குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் உள்ள மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து தங்கியிருந்து வழிபாடு நடத்தி செல்வர். இந்த சூழலில் தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த சாகுல் ஹமீது, தனது மனைவி நாகூர் மீரா, குழந்தைகள் முகமது சபிக் (7),  நஜிலா பாத்திமா (2 1/2) ஆகியோருடன் ஆற்றங்கரை பள்ளிவாசலுக்கு நேற்று மதியம் வந்து தங்கி உள்ளார். தனது இரு குழந்தைகளுக்கு மொட்டை அடித்து நேர்த்திக் கடன் செலுத்த வந்த  நிலையில் இரவு நேரமாகியதால் தனது குழந்தைகளுடன் தர்காவில் உள்ள திண்ணையில் தூங்கி உள்ளனர்.




பின்னர் அதிகாலை தூங்கி எழுந்து பார்த்த போது தனது அருகே தூங்கிக் கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தை நஜிலா பாத்திமா காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். குழந்தையை பல இடங்களில் சுற்றி தேடியும் கிடைக்காத நிலையில் சாகுல்ஹமீது குழந்தை காணாமல் போனது குறித்து கூடன்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளின் பதிவுகளையும் ஆய்வு செய்தனர். அதில் அதிகாலை 4 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை தோளில் தூக்கி கொண்டு நடந்து சென்று அருகே நிறுத்தி இருந்த காரில் கடத்தி செல்வது பதிவாகி உள்ளது.




குழந்தையை மர்ம நபர் ஒருவர் கடத்தி செல்வது சிசிடிவி காட்சியில் உறுதியானதை தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். மேலும் சிசிடிவியில் பதிவான இந்த காட்சிகளை வைத்து காவல்துறையினர்  விசாரணை செய்து வருவதோடு குழந்தையை கடத்திய மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை மர்ம நபர் ஒருவர் அதிகாலை நேரத்தில் கடத்தி செல்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.