நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ளது வாகைகுளம். இப்பகுதியை சேர்ந்த இராமையா என்பவரின் மகன் இசக்கி பாலா (26). இவர் வாகைகுளம் பிரதான சாலையில் ஆண்கள் முடி திருத்தம் செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல முடி திருத்தும் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கடைக்கு சென்ற மர்ம நபர்கள் இசக்கிபாலாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து இசக்கி பாலாவை வெட்டி சாய்த்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த இசக்கி பாலா இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அங்கேயே உயிரிழந்தார். இதனையடுத்து இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். மேலும் இதுகுறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் அம்பாசமுத்திரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இசக்கிபாலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து சம்பவ இடத்தில் அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார். இந்த கொலை முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா? அல்லது கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு அருகில் சிசிடிவி கேமரா ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொலையில் ஈடுபட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். சலூன் கடையில் பணியில் இருந்த வாலிபர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதோடு உறவினர்களிடையே மிகுந்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொலை நடந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்,
மேலும் இந்த கொலை குறித்து முன் பகை உள்ளதா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என அம்பாசமுத்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.