நெல்லை மாவட்டம் மேல திருவேங்கடநாதபுரத்தை சார்ந்தவர் சுடலை. இவரது மனைவி முப்பிடாதி. இவர்களுக்கு குழந்தைகள் இல்லாத  நிலையில் முப்பிடாதியின் கணவர் சுடலையும் வயது முதிர்வு காரணமாக ஏற்கனவே உயிரிழந்து உள்ளார். இதனால் முப்படாதி தனது சொந்த கிராமமான திருவேங்கடநாதபுரத்தை விட்டு  விட்டு  நெல்லை நகர் பகுதிக்கு வந்து தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் முப்பிடாதி - சுடலைக்கு சொந்தமான பூர்வீக இடம் மேல திருவேங்கடநாதபுரம் பகுதியில் இரண்டு ஏக்கர் நன்செய் நிலமாக இருந்து உள்ளது. இந்த இடத்தை தனது பெயருக்கு எழுதி தருமாறு சுடலையின் சகோதரர் மகன் பாலமுருகன் என்பவர் அடிக்கடி தனது பெரியம்மாவான முப்பிடாதியிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால் அவர் சொத்தை கணவரின் சகோதரர் மகன் பாலமுருகனுக்கு கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 


இந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி மேல திருவேங்கடநாதபுரத்தில் ஒரு திருமண நிகழ்வு  நடந்துள்ளது. அதற்கு முப்பிடாதியால் செல்ல முடியாத நிலையில் மறுநாள்  திருமண வீட்டிற்கு சென்று மணமக்களை நேரில் வாழ்த்துவதற்காக கிராமத்திற்கு வந்துள்ளார். அப்போது திருமண வீட்டிற்கு செல்லும் வழியில் தனது வீட்டருகே காத்திருந்த பாலமுருகன் பெரியம்மா முப்புடாதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.  சொத்தை தனக்கு எழுதி தர வேண்டும் என கேட்டு பிரச்சினை செய்த நிலையில் முப்பிடாதி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே அங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.  அப்போது சொத்தை தனக்கு தர மறுத்த ஆத்திரத்தில் பெரியம்மாவை  வீட்டின் அருகே கிடந்த உலக்கையை எடுத்து அவரது தலையில் கடுமையாகத் தாக்கியுள்ளார்.


அப்போது தலையில் இருந்து இரத்தம் வழியவே நிலைகுலைந்து கீழே விழுந்தார் முப்பிடாதி.  உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு  நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சேர்த்து உள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட முப்பிடாதிக்கு நேற்று மாலை முதல் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று  உயிரிழந்தார்.  இதனிடையே இது தொடர்பாக தகவலறிந்த சுத்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது தொடர்பாக பாலமுருகனை பிடித்து விசாரித்து வந்த நிலையில் தற்போது முப்பிடாதி உயிரிழந்ததும் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  சொத்திற்காக இளைஞர் ஒருவர் தனது பெரியம்மாவை உலக்கையால் அடித்து கொலை செய்த சம்பவம்  நெல்லையில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.