வேலூர் அடுத்த கொணவட்டம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் வேலூர் மாவட்டத்தலைவர் இல்ல திருமணத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.


பின்னர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:


விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவின் நிலைபாடு என்ன என்பதை இரண்டு நாட்களில் நிர்வாக குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதில் அனைவரிடம் கலந்து பேசிய பிறகு எங்களுடைய முடிவை தெரிவிப்போம். நீட் தேர்வு தேவை கிடையாது, சமூக நீதிக்கும், கிராமபுற மாணவர்களுக்கும், ஏழை மாணவர்களுக்கும் எதிரான நீட் தேர்வை இந்தியா முழுவதும் ரத்து செய்ய வேண்டும், குறைந்தது தமிழகத்திலாவது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது தான் எங்களுடைய நோக்கம். பாமக பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததற்க்கு காரணமே நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வர வேண்டும் என்பதற்க்காகத்தான். தற்போது மூன்றாவது முறையாக மோடி வந்துள்ளார். இவர் இந்தியாவை மூன்றாவது பொருளாதார நாடாக உலகளவில் எடுத்து செல்வார். அதே போல் மருத்துவர் ராமதாஸ் சொல்வதை போல் இந்தியா சார்ந்த சமூக நீதி பிரச்சனைகளை வலியுறுத்தி தீர்வு காண்போம். காவிரி நீர் பிரச்சணை தீர்க்கபட வேண்டும் அதை நாங்கள் வலியுறுத்துகிறோம் அதனை தீர்க்க முயற்சி செய்வோம்.


காவிரி தமிழ்நாட்டின் உயிர்நாடி பிரச்சனை, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி இங்கு திமுக ஆட்சி இதற்கு தீர்வு காண வேண்டும் 


காவிரி தமிழ்நாட்டின் உயிர்நாடி பிரச்சனை. 50 லட்சம் விவசாயிகள், 4 கோடி மக்கள், 22 மாவட்டங்கள் பயனடைகிறது. இரு மாநிலங்களும் சுமூக தீர்வு காண வேண்டும். அங்கு காங்கிரஸ் ஆட்சி இங்கு திமுக கூட்டணி ஆட்சி இதற்கு தீர்வு வேண்டும். தமிழக முதல்வர் போதை பொருளை மும்முரமாக ஒழிப்பதாக சொல்வது செயலில் ஒன்றுமில்லை. நான் முதல் சந்திப்பில் முதல்வரிடம் போதை பொருளை ஒழிக்க சொன்னேன். கஞ்சா, அபின் போன்றவைகளை ஒழிக்க மாதம் தோறும் கூட்டம் நடத்தி ஒழிக்க சொன்னேன். ஆனால் கஞ்சா 1.0, 2.0 என சொல்லி 5 ஆயிரம் பேரை கைது செய்வார்கள். அவர்கள் ஜாமீனில் வெளி வந்துவிடுவார்கள்.  மதுவை விட கஞ்சா போதை பொருள் பிரச்சனையால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனை தடுக்க தமிழக முதல்வர் இதில் கவனம் செலுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணிராமதாஸ் கூறினார். இந்த செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட செயலாளருமான கே எஸ் இளவழகன் உட்பட பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.