விழுப்புரம் : அரசு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை 10 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை மாணவியின் உறவினர் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள மேல்கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த  கூலி தொழிலாளியின் மகள் பாலியல் கொடூரத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.


மாணவி கடந்த சில தினங்களாக மனதளவிலும், உடலளவிலும் சோர்வாக காணப்பட்டதாக, மாணவி படிக்கும் அரசுப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை, மாணவியை அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளார். 


இதில் தனது மாமா சசி என்பவர் தன்னை பல நாட்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாகவும்,  மேலும் அவருடைய நண்பர்கள் மற்றும் செ.குணத்தூரை சேர்ந்த இளைஞர்கள் சிலர் என 10 பேர் சேர்ந்து தன்னை கூட்டு பாலியலுக்கு உட்படுத்தப்பட்டதாக ஆசிரியரிடம் தெரிவித்த மாணவி தன்னை இவற்றிலிருந்து காப்பாற்றுமாறு கண்ணீர் மல்க கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் ஹேமலதா மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியாவிடம் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக மாணவி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.




பின்னர் இதுகுறித்து விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியர் ஹேமலதா புகார் அளித்தார். அதன் பேரில் காவல் ஆய்வாளர் கவிதா மாணவிடம் விசாரணை மேற்கொண்டார். மாணவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில்  மாணவியின் உறவினரான சசி, மணிகண்டன்,  விநாயகமூர்த்தி ஆகிய 3 பேரை அழைத்து வந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மாணவியை கூட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய இந்த 3  பேர் மீதும் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர் . மேலும் இதில் தொடர்புடைய 7 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.




கடலூர் மாவட்டத்தில் கடந்த வாரம் பள்ளி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் அதே போன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது. பள்ளி செல்லும் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழலை ஏற்பட்டுள்ளது.  மேலும் தமிழகத்தில் தொடரும் பள்ளி , கல்லூரி , மாணவிகள் , பெண்கள் மீதான பாலியல் ரீதியான குற்றச் சம்பவங்கள் அதிகரித்துவருவது பெற்றோரிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.  இவற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையும் தமிழக அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.