விழுப்புரம் பாக்கம் கூட்டுசாலையை சேர்ந்த சுந்தர மூர்த்தி என்பவரின் மகன் நெல் வியாபாரி முருகன் என்பவர் மாதாந்திர ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு நடத்தி வருகிறார். இவர்களிடம் வேலை செய்யும்  கோண்டூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கெங்கமுத்துவிடம் நீங்கள் தீபாவளி சீட்டுக்கு 50 பேரை சேர்த்து விட்டால் உங்களுக்கு ஒரு சீட்டு இலவசம் என்று சுந்தரமூர்த்தி கூறினார். இதை நம்பிய கெங்கமுத்துவின் மனைவி மஞ்சுளா, கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 78 பேரை தீபாவளி சீட்டில் சேர்த்து விட்டதோடு ஒருவருக்கு மாதம் 200 வீதம் 78 பேருக்கு 15,600 ரூபாயை செலுத்தி உள்ளார். இவ்வாறாக 12 மாதத்திற்கு 1 லட்சத்து 87 ஆயிரத்து 200 ரூபாயை மாதந்தோறும் சுந்தரமூர்த்தியிடம் அவரது வீட்டிற்கு நேரில் சென்று மஞ்சுளா கொடுத்து வந்துள்ளார். சில சமயங்களில் சுந்தரமூர்த்தி வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது மகன் முருகன், மருமகள் மகேஸ்வரி ஆகியோர் பணத்தை பெற்றுக்கொண்டு அதற்கான ரசீது தராமல் ஒரு நோட்டில் வரவு வைத்துக்கொண்டு கையெழுத்து வாங்கி வந்துள்ளார்.




மஞ்சுளாவை போன்று அதே கிராமத்தை சேர்ந்த அஞ்சலை என்பவர் தனக்கு தெரிந்த 50 பேரிடமும், வில்லியனூர் கீழுர் கிராமத்தை சேர்ந்த வள்ளியம்மாள் என்பவர் தனக்கு தெரிந்த 54 பேரிடமும், ஆனந்தாயி என்பவர் தனக்கு தெரிந்த 63 பேரிடமும், மிட்டாமண்டகப்பட்டை சேர்ந்த விஜயகுமாரி என்பவர் தனக்கு தெரிந்த 42 பேரிடமும் பணம் வசூலித்து  மொத்தம் 41 லட்சத்து 6 ஆயிரத்து 500 ரூபாயை சுந்தரமூர்த்தி, முருகன், மகேஸ்வரி ஆகியோரிடம் கொடுத்துள்ளனர். பணத்தை பெற்றுக்கொண்ட சுந்தரமூர்த்தி உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட தேதியில் தருவதாக கூறினர். ஆனால் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்து விட்டனர். பணத்தை பறிகொடுத்தவர்கள், சுந்தரமூர்த்தி வீட்டிற்கு சென்று தங்களது பணத்தை திருப்பித்தரும்படி கேட்டதற்கு அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 



இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட 3 பேர் மீதும் துணை காவல் கண்காணிப்பளர் இருதயராஜ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன், அவரது மனைவி மகேஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் விழுப்புரம் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருக்கும் சுந்தரமூர்த்தியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர