எட்டயபுரம் அருகே கீழநம்பிபுரம் பள்ளியில் புகுந்து ஆசிரியர்களை தாக்கியவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.




தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள கீழநம்பிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியசாமி. இவருடைய மகள் செல்வி. செல்விக்கு திருமணம் ஆகி அவரது கணவர் சிவலிங்கத்துடன் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில்  வசித்து வருகிறார் . சிவலிங்கம் மற்றும் செல்வி தம்பதிக்கு  பிரகதீஸ்,(7) என்ற மகன் உள்ளான். பிரகதீஸ் தனது தாத்தாவான முனியசாமி உடன் கீழநம்பிபுரத்தில் வசித்து வருகிறார். அங்குள்ள அரசு உதவி பெறும் இந்து தொடக்கப் பள்ளியில் பிரகதீஸ் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.




அந்தப் பள்ளியில் வீரப்பட்டியை சேர்ந்த குருவம்மாள் (60) தலைமை ஆசிரியராகவும், தூத்துக்குடி தருவைகுளத்தைச் சேர்ந்த பாரத் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் கடந்த 21-ந் தேதி வகுப்பில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது பிரகதீஸ் கீழே விழுந்ததாக தெரிகிறது. மெதுவாக விளையாடும் படி ஆசிரியர் பாரத் சத்தம் போட்டதாக கூறப்படுகிறது.  ஆனால் மாணவர் பிரகதீஸ் வீட்டுக்குச் சென்று தனது தாத்தா முனியசாமியிடம் ஆசிரியர் பாரத் தன்னை அடித்ததாக கூறியுள்ளார். இந்நிலையில் பள்ளிக்குச் சென்ற சிவலிங்கம் அவரது மனைவி செல்வி, செல்வியின் தந்தை முனியசாமி ஆகியோர்  எப்படி பையனை அடிக்கலாம் என்று ஆசிரியர் பாரத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.வாக்குவாதம் முற்றவே ஆசிரியர் பாரத்தை அவதூறாக பேசியது மட்டுமின்றி, கொலை மிரட்டல் விடுக்கும் நோக்கில் பேசியுள்ளனர்.மேலும் காலணி எடுத்து ஆசிரியர் பாரத்தை ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளனர்.‌ இதை தடுக்க வந்த பள்ளி தலைமை ஆசிரியர் குருவம்மாளையும் தாக்கி உள்ளனர்.




இதுகுறித்த புகாரின் பேரில் எட்டையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவலிங்கம்,செல்வி,முனியசாமி ஆகிய மூன்று பேரையும் அன்றைய தினமே கைது செய்தனர் தொடர்ந்து விசாரணை நடைபெற்ற நிலையில் மாரிசெல்வியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.




இந்நிலையில், எட்டயபுரம் அருகே கீழநம்பிபுரம் கிராம மக்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு அளித்தனர்.மனுவில் எட்டயபுரம் அருகே கீழநம்பிபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் இந்து தொடக்கப் பள்ளியில் சுமார் 21 குழந்தைகள் படித்து வருகின்றனர். அங்கு 2 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.கடந்த 21-ந் தேதி பள்ளியில் வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது, எங்களது ஊரைச் சேர்ந்த முனியசாமி, மாரிச்செல்வி, சிவலிங்கம், செல்வி ஆகிய 4 பேரும் அத்துமீறி பள்ளிக்குள் நுழைந்து அங்கு பணிபுரியும் தலைமை ஆசிரியை குருவம்மாள் மற்றும் இடைநிலை ஆசிரியர் பாரத் ஆகியோரை ஓட ஓட விரட்டி கொடூரமாக தாக்கியதுடன், தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனர்.


இதுகுறித்த புகாரின் பேரில் 4 பேரையும் போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த நபர்களால் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும், அங்கு படிக்கும் எங்கள் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது.மேலும் முனியசாமி மீது பல வழக்குகள் உள்ளன. இப்படிப்பட்ட நபர் பள்ளிக்குள் கூலிப் படைகளை அனுப்பி தாக்குதல் நடத்த வாய்ப்புகள் உள்ளது. இதனால் எங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சமாக உள்ளது.


எனவே, இந்த நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து ஜெயிலில் அடைத்தால் மட்டுமே இனிவரும் காலங்களில் ஆசிரியர்கள், குழந்தைகக்கும் பாதுகாப்பு கிடைக்கும். அதுவரை எங்களது குழந்தைகளை பள்ளிக்கு செல்ல அனுமதிக்க இயலாத நிலை உள்ளது என்று கூறி உள்ளனர்.