தூத்துக்குடியில் வட மாநில தொழிலாளரிடம் வழிப்பறி செய்ய முயற்சி செய்ததை தடுக்க போராடியவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




தூத்துக்குடியில் தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் ஜார்கண்ட் மாநிலம் ஹாசாரி பாக் மாவட்டத்தை சேர்ந்த திவான் என்பவரது மகன் பிக்கி யாதவ் (வயது 37). வட மாநிலத்தவரான இவர் தனது லாரியில் சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு துறைமுகத்தை நோக்கி நேற்றிரவு சென்றுள்ளார். தூத்துக்குடி தென்பாகம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் உள்ள ஓட்டலில் இரவு சாப்பாட்டிற்காக லாரியை ஓரமாக நிறுத்தி சாப்பிட்டு விட்டு மீண்டும் தனது லாரியில் ஏற வரும்போது, வழிமறித்த இருசக்கரத்தில் வந்த 3 பேர் கொண்ட மர்மகும்பல் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.




இதனை சற்றும் எதிர்பாராத ஓட்டுநர் விக்கி யாதவ் அவர்களிடம் கொள்ளை முயற்சியை தடுக்க போராடியுள்ளார். இந்த போராட்டத்தில் மூன்று நபர்கள் சேர்ந்து ஓட்டுனர் விக்கி யாதவ் கடுமையாக தாக்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து 3 பேரும் சேர்ந்து ஓட்டுநரிடமிருந்த ரூ.3 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்து சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த வட மாநிலத்தவரான விக்கியாதவ் பலத்த காயத்துடன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.




மேலும், இதுகுறித்து காவல்துறையினர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் இச்சம்பவம் குறித்து மற்றவர்களுக்கும், செய்தியாளர்களுக்கும் எந்த தகவலும் தெரிவிக்கக்கூடாது என தெரிவித்துள்ளதாகவும், இதனால் அவர் யாருக்கும் எந்த தகவலும் தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது.தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறை மற்றும் மாவட்ட காவல்துறை வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், தூத்துக்குடியில் வட மாநில தொழிலாளி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.